ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான தமிழக அரசின் கோரிக்கையை பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தி இந்து செய்தி கூற்றுப்படி, கடந்த வாரம் அனுப்பப்பட்ட கடிதத்தில், இப்பகுதியில் உள்ள வான்வெளி இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்.ஏ.எல்) நிறுவனத்திற்கு தேவைப்படுவதால், தமிழக அரசின் கோரிக்கையை நிராகரிப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு அருகே இருக்கும் தொழில்துறை நகரமான ஓசூரில், சர்வதேச ஓசூர் விமான நிலையம் அமைப்பதற்கான முயற்சிகளை தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது. ஓசூர் சர்வதேச ஓசூர் விமான நிலையத்திற்கு தள அனுமதி கிடைத்தவுடன், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ – TIDCO) சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் கொள்கை அளவிலான அங்கீகாரத்தைப் பெறும்.
இந்நிலையில், ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான தமிழக அரசின் கோரிக்கையை பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் நிராகரித்துள்ளது, இது ஒரு குறிப்பிடத்தக்க பின்னடைவாகக் கருதப்படுகிறது.
ஓசூர் விமான நிலையம் அமைப்பதற்கு பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து முதன்மையான அனுமதி பெற வேண்டும். ஏனென்றால், இப்பகுதியின் வான்வெளி இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்.ஏ.எல்) கட்டுப்பாட்டில் உள்ளது. “எச்.ஏ.எல்-க்கு இந்த வான்வெளி தேவைப்படுவதால் கோரிக்கையை நிராகரிப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் கடந்த வாரம் கடிதம் மூலம் தெரிவித்தது. இப்போது, அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து மாநில அரசு தனது வாய்ப்புகளை ஆய்வு செய்யத் தொடங்கும்” என்று ஒரு வட்டாரம் தெரிவித்ததாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், விமான நிலையம் அமைக்கத் தேவையான வான்வெளி தளர்வுகளைக் கோரி தமிழக அரசு பாதுகாப்புத் துறை அமைச்சகத்திடம் விண்ணப்பித்தது, ஆனால், தமிழக அரசின் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நவம்பர் மாதம் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் விரிவான பதிலைச் சமர்ப்பித்தார். அதில், எச்.ஏ.எல்-ன் செயல்பாடுகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் ஓசூரில் விமான நிலையம் அமைப்பது எப்படிச் சாத்தியம் என்பதற்கான தரவுகளைச் சுட்டிக்காட்டியிருந்தார்.
இது குறித்து தமிழக அரசு தரப்பில், “ஒரு விவாதம் கூட நடத்தப்படாமல் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது ஏமாற்றமளிக்கிறது. தமிழக அரசுக்கும் பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் இடையே ஒரு சந்திப்பு நடந்திருந்தால், அரசு தனது தரப்பு விளக்கத்தை அளிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும்” ஒரு வட்டாரம் கூறியதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், விமான நிலையத்திற்கான தள அனுமதி கோரிக்கையை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு அரசு அனுப்பிய நிலையில், அவர்கள் ஒரு தாக்க ஆய்வு செய்யக் கோரியுள்ளனர். “முன்மொழியப்பட்டுள்ள ஓசூர் விமான நிலையம், தற்போதுள்ள பெங்களூரு அல்லது சேலம் விமான நிலையங்களின் ஏதேனும் ஒரு வகையில் பாதிக்குமா என்பதைக் காட்ட இந்த ஆய்வு கேட்கப்பட்டுள்ளது. இதை டிட்கோ மேற்கொண்டு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்” என்று அதே வட்டாரம் தெரிவித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டத்தில், பேரிகை மற்றும் பாகலூர் இடையே சுமார் 2,300 ஏக்கர் பரப்பளவில், 3 கோடி பயணிகளைக் கையாளும் திறன் கொண்ட சர்வதேச விமான நிலையம் ஓசூரில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஓசூர் விமான நிலையத்திற்கு தள அனுமதி கிடைத்தவுடன், டிட்கோ சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் கொள்கை அளவிலான அனுமதியைக் கேட்கும்.
பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கும் இடையே உள்ள தற்போதைய ஒப்பந்தத்தின்படி, பெங்களூரு விமான நிலையத்திலிருந்து 150 கி.மீ வான்வழித் தூரத்திற்குள் புதிய விமான நிலையம் அமைக்கத் தடை உள்ளது என்பது ஓசூர் விமான நிலையத்திற்கு இருக்கும் மற்றொரு பெரும் சவாலாகக் கருதப்படுகிறது.
இந்த சூழலில்தான், ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான தமிழக அரசின் கோரிக்கையை பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் நிராகரித்துள்ளது, இது ஒரு குறிப்பிடத்தக்க பின்னடைவாகக் கருதப்படுகிறது.
