மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், தொடர்ந்து, “தி.மு.க. அரசு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. நீங்கள் 2 ஆயிரம் ரூபாய் அறிவித்திருக்கிறீர்கள். ஏற்கெனவே கடன்சுமை அதிகமாக உள்ளது. நீங்கள் சொல்வதை எப்படிச் சமாளிக்க முடியும்?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், அவர்களுக்கு (தி.மு.க.) திறமை இல்லை; எங்களுக்குத் திறமை இருந்தது. நாங்கள் ஆட்சி செய்யும்போது 5 லட்சத்து 18 ஆயிரம் கோடிதான் கடன் இருந்தது. எந்தச் சூழ்நிலையில்? ஓராண்டுக் கொரோனா காலத்தில் கூட அரசுக்கு வரி, வருவாய் இல்லாத நேரத்தில் கூட, கொரோனா தடுப்புக்கு ரூ.40 கோடி செலவு செய்தோம். நாங்கள் திறமையாக நிதியைக் கையாண்டு, நிதிச்சுமை இல்லாமல், நிதிச்சுமை குறைவாக உள்ள சூழ்நிலையை நாங்கள் உருவாக்கித் தந்திருக்கிறோம்.

ஆனால், தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, நிதி மேலாண்மைக்காக நிபுணர் குழு அமைக்கப்பட்டு, அதன் மூலம் கடன் குறைக்கப்படும், வருவாய் உயர்த்தப்படும் என்று சொன்னார்கள். ஆனால், அதற்கு நேர்மாறாக நிபுணர் குழு அமைக்கப்பட்ட பிறகு கடன் தான் அதிகரித்திருக்கிறது. சுமார் இந்த தி.மு.க. ஆட்சி முடியும் தருவாயில் 5.5 லட்சம் கோடி கடன் இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

நிர்வாகத் திறமை இருந்தால் எல்லாவற்றையும் சமாளிக்கலாம். நிர்வாகத் திறமையற்ற அரசு இருக்கும்போதுதான் கடன்சுமை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இரண்டாம் கட்டத் தேர்தல் அறிக்கை வெளியிடும்போது இன்னும் பல அறிவிப்புகள் வெளியிடப்படும். எங்களுடைய தேர்தல் தயாரிப்புக் குழு ஒவ்வொரு மண்டலமாகச் சென்று மக்களிடம் கோரிக்கைகளைப் பெற்று, அதை அறிக்கையாகத் தயாரித்து ஆய்வுசெய்து, மக்கள் என்னென்ன நினைக்கிறார்களோ அதன் அடிப்படையில் எங்கள் தேர்தல் அறிக்கை உருவாகும் எனவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version