பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு இடையே ஆளுநர் ரவியை காலை 11 மணி அளவில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கவுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் வந்திருந்தார். அப்போது அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளில் ஒருவரான எஸ்.பி. வேலுமணி அவரை இரண்டு முறை தனியாக சந்தித்து பேசியிருந்தார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், ஆளுநர் ரவியை காலை 11 மணி அளவில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கவுள்ளார். சந்திப்பின்போது, அமைச்சர்கள் தொடர்புடைய முறைகேடுகளுக்கான ஆதாரங்களை ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நகராட்சி நிர்வாகத்துறை ஊழல் தொடர்பாக அமைச்சர் கே.என்.நேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யாதது குறித்தும், அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான மணல் கொள்ளை வழக்கில் ரூ.3,000 கோடி முறைகேடு தொடர்பாகவும் எடப்பாடி பழனிசாமி புகார் மனு அளிக்க உள்ளார்.
மேலும், தமிழக சட்டசபை வரும் 20-ஆம் தேதி கூடுகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் உரையுடன் இந்த சட்டசபை கூடுவது வழக்கம். இத்தகைய சூழலில், எடப்பாடி பழனிசாமி தமிழக ஆளுநரை சந்திப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
