மேற்கு வங்கத்தில் நிபா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், பறவைகள் மற்றும் விலங்குகள் கடித்த பழங்களை உண்ண வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் 2 செவிலியர்களுக்கு நிபா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நிபா வைரஸ் என்பது விலங்குகள் மூலம் பரவும் நோய்த் தொற்றாகும். பழங்களை உண்ணும் வௌவால்கள், குதிரைகள், நாய்கள் மற்றும் பன்றிகள் மூலம் இந்த வைரஸ் மனிதா்களுக்குப் பரவி வருகிறது. இதையடுத்து, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒருப்பகுதியாக, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், பதநீர் அருந்துவதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் நிபா தொற்று பரவல் இல்லை என்றாலும், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
காய்ச்சல், தலைவலி, வாந்தி, சுவாச சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என்றும் சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தநிலையில், இன்று சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை இயக்ககம் சார்பாக பேறுசார் குழந்தைகள் நலத்திட்ட ( RCH ) பகுதி நேர தூய்மை பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தி வழங்கும் விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், மேற்கு வங்கத்தில் நிபா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் நிபா வைரஸ் பரவாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நிபுணர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நிபா வைரஸ் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நிபா வைரஸ் குறித்தான விழிப்புணர்வையும் மக்கள் இடையே ஏற்படுத்தி வருகிறோம் என தெரிவித்தார்.
