தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்து, ஒட்டுமொத்த மாநிலமும் மே 4-ஆம் தேதி வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில், ஒருபுறம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவியுடன் கொடைக்கானலுக்கு ஓய்வெடுக்க சென்றார். மறுபுறம் தவெக தலைவர் விஜய் ஆன்மீக ரீதியாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். நேற்று அதிகாலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விஸ்வரூப தரிசனம் செய்த அவர், இன்று (ஏப்ரல் 29) மகாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயிலில் வழிபாடு நடத்தினார். அங்கு அவர் முழங்காலிட்டுப் பிரார்த்தனை செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இதற்கிடையே, விஜய் நாளை (ஏப்ரல் 30) புனித மெக்கா நகருக்கு செல்லத் திட்டமிட்டுள்ளதாகச் சமூக வலைதளங்களில் தகவல் வேகமாகப் பரவி வருகிறது. தனது கட்சி முன்னிறுத்தும் மதச்சார்பின்மை மற்றும் ‘மத நல்லிணக்கம்’ ஆகிய கொள்கைகளைப் பறைசாற்றும் விதமாக, அனைத்து மதங்களின் புனிதத் தலங்களுக்கும் அவர் செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெக்கா பயணத்தைத் தொடர்ந்து, அவர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கும் சென்று மெழுகுவர்த்தி ஏற்றி வழிபாடு செய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆன்மீகப் பயணங்கள் குறித்து தவெக தரப்பிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை என்றாலும், தேர்தல் முடிவுகளுக்கு முந்தைய இந்த நகர்வுகள் அரசியல் களத்தில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களின் முக்கிய வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதன் மூலம், தான் அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய ஒரு தலைவராகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விஜய் முயற்சிப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ள நிலையில், அதற்குள்ளாக இந்தப் பயணங்களை அவர் நிறைவு செய்யத் திட்டமிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version