கோவை, சின்னியம்பாளையம் பகுதியில் அவினாசி சாலையை ஒட்டிய இடத்தில் ’ஸ்ரீ பிளாக் மாரியம்மன்’ என்ற திருக்கோயில் அமைந்து உள்ளது. இன்று(18.06.2025) காலை கோயில் பூசாரி கோயிலை திறக்க வந்த போது கோயிலில் உள்ள விநாயகர், இராகு, கேது, எலி வாகனம் உள்ளிட்ட சிலைகள் உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்தான தகவல் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பரவியது. இதனை அடுத்து ஏராளமான பொதுமக்கள் கோயிலில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துணை கண்காணிப்பாளர் தங்கராமன், சூலூர் காவல் ஆய்வாளர் லெனின் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் விசாரணை நடத்தினார்கள். கோயிலை சுற்றி உள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பாதுகாப்பிற்காக கோயிலில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.