திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் இன்று காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்ட முக்கியமான விடயங்களை இந்த கட்டுரையில் காணலாம்.
“திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்” என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த 1-ந்தேதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர் மற்றும் மதுரை மாவட்ட கலெக்டர் சார்பில் தனித்தனியாக மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு சொத்து உரிமை சார்ந்தது என்பதால் உரிமையியல் வழக்கு மூலமே தீர்வு காண முடியும் என கோயில் நிர்வாகம் தரப்பில் முறையிடப்பட்டிருந்தது. இவ்வழக்கில் இந்து அமைப்புகளை சேர்ந்த ராம ரவிக்குமார், சோலைக்கண்ணன் சார்பில் வக்கீல்கள் அருண்சுவாமிநாதன், நிரஞ்சன் எஸ்.குமார் ஆகியோர் கேவியட் மனு தாக்கல் செய்தனர். அதுபோக மாநகரக் காவல் ஆணையர், தர்கா நிர்வாகம் உள்ளிட்டோர் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தன. வழக்கை விசாரித்த நீதிபதிகள் எதிர்மனுதாரர்களுக்கு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி மேல்முறையீட்டு வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். அதன்படி வெள்ளிக்கிழமையான இன்று மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அரசுத்தரப்பு, கோயில் நிர்வாகம் தரப்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அரசுத்தரப்பு வாதம்:-
முதலில் அரசுத்தரப்பு முன்வைத்த வாதத்தில், “மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றும் உரிமை குறித்து நீண்ட காலமாக சர்ச்சை நிலவி வருகிறது. சுமார் 500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மலைக்கோயிலுக்கு அருகிலேயே ஒரு தர்காவும் உள்ளது. பாரம்பரியமாக உச்சிப் பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றப்பட்டு வந்துள்ளது. ஆனால், ராம ரவிக்குமார் என்பவர் கோயில் நிர்வாகமோ அல்லது தானோ தர்காவிற்கு அருகிலுள்ள ‘தீபத்தூண்’ என கூறப்படும் இடத்தில் தீபம் ஏற்ற அனுமதி கோரியுள்ளார். இந்த விவாதத்தில் முக்கியமான மையப்புள்ளி, உண்மையிலேயே அது தீபத்தூணா? அல்லது நில அளவைக்கல்லா? என்பது தான்.
அப்போது குறுக்கீட்ட நீதிபதிகள் “திருப்பரங்குன்றம் தூண் சர்வே தூண் தானா என்று உறுதி செய்து உள்ளீர்களா? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர் “மலை உச்சியில் உள்ளது சர்வே தூண் தான்; தீபத்தூண் இல்லை என கூறினார். மேலும், கடந்த 1920 ஆம் ஆண்டில் நடந்த முதல் வழக்கில் இந்த ‘தீபத்தூண்’ குறித்து எந்தக் குறிப்பும் தெரிவிக்கப்படவில்லை. மனுதாரர்கள் கூட ‘தீபத்தூண்’ என்று குறிப்பிடவே இல்லை. ஆக, அந்தத் தூணில் தீபம் ஏற்றுவது வழக்கமான நடைமுறையாக இருந்தது என்பதை மனுதாரர்கள் நிரூபிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில். அவர்கள் அதை நிரூபிக்கவில்லை. அது தீபத்தூண் என்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. சுமார் 74 ஆண்டுகளுக்குப் பிறகு 1994-ல் அடுத்த வழக்கு தொடரப்பட்டது. அதற்கு இடைப்பட்ட காலத்தில் திருப்பரங்குன்றத்தில் மக்கள் தொடர்ந்து விளக்கேற்றினர். ஆனால், ‘தீபத்தூண்’ என்று இவர்கள் சொல்லும் அந்த தூணில் விளக்கு ஏற்றப்படவில்லை. அக்காலகட்டத்தில் இரு சமூகத்தினரும் எவ்வித இடையூறுமின்றி அமைதியான முறையில் இணைந்து வழிபட்டுள்ளனர்.
மேலும், இந்திய நில அளவை துறையிடம் இருந்து பெறப்பட்ட RTI தகவலை சுட்டிக்காட்டிய அரசு, “திருப்பரங்குன்றம் மலையில் இரண்டு சர்வே கற்கள் மட்டுமே உள்ளன. அரசு ஆவணங்களின்படி, 1808 – 1809 மற்றும் 1871-ம் ஆண்டுகளில் திருப்பரங்குன்றம் மலையில் சர்வே கற்கள் நிறுவப்பட்டன. அந்த கற்கள் வெறும் சர்வே கற்கள் என்று மதுரையைச் சேர்ந்த அப்துல் ஜாபர் கேட்ட கேள்விக்கு RTI-ல் அனுப்பட்ட பதிலை அரசு மேற்கோள்காட்டியுள்ளது.
தொடர்ந்து வைக்கப்பட்ட வாதத்தில், 1994 ஆம் ஆண்டில் இதே போன்ற கோரிக்கையுடன் ஒரு பொதுநல வழக்கு தனி நீதிபதி முன் தாக்கல் செய்யப்பட போதும்,”பாரம்பரியமாக ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது என்றும், அந்த நிலையை மாற்ற நியாயமான காரணம் இல்லை” என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், இடம் மாற்றம் குறித்த முடிவை கோயில் நிர்வாகமே எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. பின்பு 2014-ல் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு மனு தொடர்பாகவும் “தீபம் ஏற்றுவதை வேறு இடத்திற்கு மாற்ற அவசியமில்லை” என தனி நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டபோதிலும், 2017-ல் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு அந்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது. ஆகவே, தீபம் ஏற்றும் விவகாரத்தில் கோயில் நிர்வாகத்தின் முடிவே தொடர வேண்டும் என வாதிடப்பட்டது.
கோயில் தரப்பு வாதம்:-
அரசுத்தரப்பை தொடர்ந்து தனது வாதங்களை முன்வைத்த கோவில் தரப்பு வழக்கறிஞர், “கோயில் நிர்வாக நடைமுறைகளில் நீதித்துறை தலையிட முடியாது. திருப்பரங்குன்றத்தில் எந்த மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி குறிப்பிடவில்லை. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் அல்ல; அது ஒரு கிரானைட் கல் தூண் தான்” என கூறினார். இடையில் “அங்கு தீபம் ஏற்றினால் மக்களுக்கு தெரியுமா?” என வினவப்பட்ட போது பதிலளித்த கோவில் தரப்பு, “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளதாக சொல்லப்படும் தீபத்தூண் உண்மையிலேயே மலை உச்சியில் இல்லை. அந்தத் தூணில் விளக்கு ஏற்றினால் யாராலும் பார்க்க முடியாது. தனி நீதிபதி தனது அதிகார வரம்பை மீறி சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அனைத்து தரப்பு வாதங்களையும் முழுமையாக கேட்டு தனி நீதிபதி உத்தரவு பிறப்பிக்கவில்லை. 175 ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றியதற்கான ஆதாரம் ஏதும் இல்லை. ஆகம விதிகளுக்கு எதிராக கோவில் நிர்வாகம் செயல்பட முடியாது. தர்கா அருகே கார்த்திகை தீபம் ஏற்றக் கூறுவது தேவையில்லாத பிரச்சினையை உருவாக்கும். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.
இந்த சர்ச்சைக்குரிய தூண் தொடர்பாக, தமிழ்நாடு தொல்லியல் துறையை சேர்ந்த துணை இயக்குநர் யதீஷ் குமார் மற்றும் உதவி இயக்குநர் லோகநாதன் தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழு சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டனர். “எதிர்தரப்பினர் இந்த அமைப்பை நில அளவைக் கல் என வாதிட்டாலும், அதன் உண்மையான இயல்பு மற்றும் வரலாற்றை இந்த ஆய்வு மூலம் கண்டறிய முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். விரிவான பகுப்பாய்வு மூலம் அதன் தன்மை உறுதி செய்யப்படும்” என சொல்லப்பட்ட போது, அதனை மறுத்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நிரஞ்சன் எஸ்.குமார், “இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது புதிய ஆதாரங்களை உருவாக்க அரசு அப்பகுதிக்குள் நுழைவது சட்டப்படி தவறு” என்று குறிப்பிட்டார். மேலும் அவர், “தூணின் அமைப்பு குறித்த இந்த ‘புதிய’ ஆதாரம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால், வழக்கின் தன்மையே மாறக்கூடும்” என்று எச்சரித்தார்.
இடையீட்டு மனுக்களை மறுப்பு:-
இதற்கிடையில் திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை வழக்கில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்வதற்கு அனுமதி மறுத்த நீதிபதிகள் “உண்மையிலேயே பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென்றால் அமைதியாக இருங்கள்” என கூறியுள்ளனர். இன்றைய விசாரணை தொடர்ந்து அடுத்தக்கட்ட விசாரணையை திங்கட்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர். திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான இந்த விவகாரம் தமிழக அரசியல் வரலாற்றில் மத மற்றும் அரசியல் ரீதியான பெரும் சர்ச்சையாக உருவெடுத்து வருவதாகவும், தமிழ்நாட்டின் அயோத்தியாவாக திருப்பரங்குன்றம் மாறி விடுமோ என்ற அச்சத்தையும் பகிர்கிறார்கள் சில அரசியல் நோக்கர்கள்.
