திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் விளாத்தி ஊரைச் சேர்ந்த சிகாமணி. இவர் துபாயில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கு மனைவி இரண்டு குழந்தைகள் உள்ளனர். சிகாமணிக்கு துபாயில் ஓட்டலில் வேலை செய்த கோவை காந்தி மாநகரை சேர்ந்த சாரதாவுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக் காதலாக மாறியது.
சாரதாவிடம் சிகாமணி ரூபாய் 6 லட்சம் வரை வாங்கி இருந்தார். இது தொடர்பாக தகராறு ஏற்பட்ட போது சாரதாவை சிகாமணி தாக்கி உள்ளார். அதன் பிறகு சாரதா கோவை திரும்பினார். இதை அடுத்து சிகாமணி ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி துபாயில் இருந்து கோவை வந்த சாரதாவை சந்தித்தார்.
அப்பொழுது ஏற்பட்ட தகராறில் சாரதா தனது உறவினர்கள் மற்றும் கூலிப்படை உதவியுடன், இறைச்சியில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து சிகாமணியை கொலை செய்து உடலை கரூர் மாவட்டம் பரமத்தியில் காட்டுப் பகுதியில் வீசினர்.
இதுகுறித்து பீளமேடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில் சாரதா தனது தாயார் கோமதி, அக்கா நிலா, உறவினர் சுவாதி, கூலிப்படையைச் சேர்ந்த புதியவன், தாயாரின் கள்ளக் காதலன் தியாகராஜன் ஆகியோருடன் சேர்ந்து சிகாமணியை கொலை செய்தது தெரிய வந்தது. இதற்கு இடையே தியாகராஜன் கோவை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். சாரதா உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சம்பவம் நடந்த இடம் சரவணம்பட்டி என்பதால் இந்த வழக்கு சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது, எனவே சாரதா உட்பட ஆறு பேரையும் காவல் துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து உள்ளனர்.
இதை அடுத்து சாரதா உள்பட ஆறு பேரையும் நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி கைதான சாரதா, கோமதி, நிலா, சுவாதி புதியவன் மற்றும் தியாகராஜன் ஆகிய ஆறு பேரையும் மூன்று நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார். இதை தொடர்ந்து சாரதா உட்பட 6 பேரையும் சரவணம்பட்டி போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீசார் கூடும்போது இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா ? சாரதாவை தாக்கியதற்கு பழிவாங்குவதற்காக கொலை நடந்ததா ? கூலிப் படையின் பங்கு என்ன ? அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரையை எப்படி ? வாங்கினார்கள் என்பது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
