விசாரணைக்கு அழைத்துச் சொல்லப்பட்டவர் மரணமடைந்த வழக்கில், உதவி ஆய்வாளர் மற்றும் இரு தலைமை காவலர்களுக்கு கொலை குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதம் மதுபோதையில் தகராறு செய்ததாக பழனி என்பவரை கோட்டூர்புரம் போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மருத்துவ பதிசோதனைக்கு ஒத்துழைக்காததால் பழனியை, காவல் துறையினர் தாக்கியுள்ளனர். பின்னர் வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட பழனி மரணமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பழனியின் தந்தை ரங்கநாதன் புகார் அளித்ததால் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, இதுகுறித்து விசாரித்த வருவாய் கோட்டாட்சியர், பழனியின் மரணத்திற்கு காவல்துறையினரின் தாக்குதல்தான் காரணம் என அறிக்கை தாக்கல் செய்தார்.

வருவாய் கோட்டாட்சியர் சி.ராஜேந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் காவல் நிலைய குற்றப் பிரிவு உதவி ஆய்வாளராக இருந்த பி.ஆறுமுகம், தலைமை காவலர்களாக இருந்த எம். மனோகரன், பி.என். ஹரிஹர சுப்ரமணியன் ஆகியோர் மீது கொலை வழக்குபதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை 6வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பாண்டியராஜ், பழனியின் மரணத்திற்கு காவல்துறையினர் தாக்கியது தான் காரணம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, எஸ்.ஐ. ஆறுமுகம், ஏட்டுகளாக இருந்த எம். மனோகரன், பி.என். ஹரிஹர சுப்ரமணியன் ஆகியோருக்கு கொலை குற்றச்சாட்டின் கீழ் ஆயுள் தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version