தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் கடலூர் மாணவி தரணி முதலிடம் பிடித்துள்ளார் சென்னையைச் சேர்ந்த மைதிலி இரண்டாம் இடம் பிடித்துள்ளார். பொதுப்பிரிவில் காஞ்சிபுரம் மாணவி சகஸ்ரா முதலிடமும், நாமக்கல்லைச் சேர்ந்த கார்த்திகா இரண்டாம் இடமும் பிடித்துள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற சுமார் 445 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பிஇ மற்றும் பிடெக் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சுமார் 2 லட்சம் உள்ளன.

சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.

தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வுக்கு இந்த ஆண்டு மொத்தம் பதிவு செய்த மாணாக்கர்களின் எண்ணிக்கை 3,02,374 அதில் பதிவுக்கட்டணம் செலுத்திய மாணாக்கர்களின் எண்ணிக்கை 2,50298. இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டை விட 40,645 கூடுதலாகும். இந்த ஆண்டு தரவரிசை எண் வழங்கப்பட்ட மாணாக்கர்களின் எண்ணிக்கை 2,41,641 இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டை விட 41.773 கூடுதலாகும்.

இந்த ஆண்டு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று அரசு ஒதுக்கீடான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 51,004 மாணாக்கர்கள் விண்ணப்பித்து இருந்தார்கள். இதில் பள்ளிகல்வி துறையால் வழங்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் 47,372 மாணாக்கர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டை விட 15,149 கூடுதலாகும்.

இந்த ஆண்டு விளையாட்டு பிரிவின் கீழ் 5,885 மாணாக்கர்கள் விண்ணப்பித்து இருந்தார்கள். அவர்களின் விளையாட்டு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு 2,446 மாணாக்கர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டில் முன்னாள் ராணுவத்தினர் வாரிசுதாரர் பிரிவின் கீழ் 1,361 மாணாக்கர்களுக்கும். மாற்றுத்திறனாளிகள் பிரிவின் கீழ் 473 மாணாக்கர்களுக்கும் தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கோவி செழியன், பொறியியல் தர வரிசைப் பட்டியலில் 145 பேர் 200க்கு 200 கட் ஆப் எடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 14 தொடங்கி ஆகஸ்ட் 17ம் தேதி வரை நடைபெறும். சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 7ம் தேதி தொடங்கும். 7.5 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் கடலூரைச் சேர்ந்த தரணி என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 51,004 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தார்கள் என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version