சில தினங்களுக்கு முன்பு நுங்கம்பாக்கத்தில் போதைப் பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் மூலம் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வாங்கியதும், பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதனையடுத்து ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு, ஜூலை 7-ம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டார். அவரை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் ஜாமின் கோரி மனு தாக்கல் அளித்த நிலையில், இருவரது மனுவையும் விசாரித்த சிறப்பு நீதிமன்றம் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், மற்றும் கிருஷ்ணாவுக்கு போதைப் பொருட்களை விற்பனை செய்த வழக்கில் அரவிந்த் பாலாஜி, சுபாஷ் ஆகிய மேலும் 2 பேரை அரும்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரும் போதைப்பொருள் சப்ளையர் கெவினின் கூட்டாளிகள் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.