தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவரான செல்வப்பெருந்தகை அக்கட்சி தலைவராக பொறுப்பேற்று இன்றோடு இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்நிலையில் அவரது இரண்டு ஆண்டு பணிகள் குறித்து விவரிக்கிறது இந்த கட்டுரை.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை கடந்த 2024 பிப்ரவரி 17 ஆம் தேதியன்று பொறுப்பேற்றார். தலைவராக வர பதவியேற்கும் போது காங்கிரஸ் கட்சியை மீண்டும் பழையபடி வளர்த்தெடுக்க வேண்டும்; தமிழ்நாட்டின் மூலை முடுக்குகள் வரை இருக்கும் காங்கிரசின் வேர்களை மீண்டும் துளிர்க்க செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பெரும் சவால்கள் அவர் முன் இருந்தன. அத்தகைய சவால்களை சரி செய்யும் வகையில் அவர் என்னென்ன முன்னெடுப்புகளை கட்சிக்குள் செய்துள்ளார் என்பதை பார்க்கலாம்.
கிராம கமிட்டி சீரமைப்பு மற்றும் புதிதாக உருவாக்கம்:
காமராஜர் காலத்திலேயே உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் வாயிலாக கிராமங்கள் தோறும் கட்சியை கொண்டு சென்று வலுவான அமைப்பாக இருந்தது காங்கிரஸ். காமராஜருக்கு பின் வந்தவர்கள் யாரும் பெரிதாக இந்த அமைப்பை பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பது சத்யமூர்த்தி பவன்காரர்கள் சொல்லும் தகவல். இந்த கிராம கமிட்டியில் கவனம் செலுத்தி அதனை சீரமைத்தும் புதிதாக கமிட்டியை உருவாக்கியும் கிராமங்களுக்குள் புது துளிரவை உருவாக்கியுள்ளார் செல்வப்பெருந்தகை. இந்த முயற்சியின் மூலம் சுமார் 2.40 லட்சம் பேர் இந்த மைப்பில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்கிறது கிடைக்கப்பெற்றேற் தகவல்.
கட்சியின் துணை அமைப்புகளை வலுப்படுத்துதல்:
காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் துணை அமைப்புகளான இளைஞரணி அமைப்பு, தகவல் தொழில்நுட்பப்பிரிவு போன்றவற்றை வலுப்படுத்தியுள்ளார். கட்சிக்குள் ஒருசாரார் கையிலிருக்கும் தகவல் தொழில்நுட்ப பிரிவு மறைமுகமாக புதிதாக வந்த அல்லது ஏற்கனவே இருக்கும் வேறொரு தலைவருக்கு எதிராக மறைமுகமாக செயல்பட்டு வந்த முறைகளை எல்லாம் மாற்றி கட்சியின் வளர்ச்சிக்காக செயல்பட வைத்துள்ளார். மேலும், வாரிசுகளின் கையிலிருந்த பதவிகளை பறித்து இஸ்லாமியருக்கு கொடுத்துள்ளது தைரியமான முன்னெடுப்பு. அதுபோல, இளைஞரணி அமைப்பை வழிநடத்தும் இடத்தில் இருப்பவர்கள் வயதானவர்களாக இல்லாமல் இளையவர்கள் இருக்கும் வகையில் நியமனங்களை செய்துள்ளார். இதன் மூலம் துடிப்பான இளைஞர்களுக்கு துடிப்பான வழிகாட்டுதல் கிடைத்துள்ளது கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்கிறது என்பது சிலரின் அழுத்தமான கருத்து.
கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தியது:
கட்சிக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்த கோஷ்டி பூசல்களை சரி செய்து கட்சியின் கட்டமைப்புகளை வலுப்படுத்தியிருப்பது முக்கியமான நகர்வு. அதுமட்டுமல்லாமல் கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கருத்தைஉள்வாங்கியது. அதன் மூலமாக தலைமை உடனான நெருக்கத்தை அவர்களிடத்தில் உறுதிப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக கட்சிக்காக உழைப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தது. இதன் காரணமாக மக்கள் மத்தியில் கட்சியை கொண்டு சென்று கொண்டிருப்பதை சாத்தியப்படுத்தியுள்ளார். அதன் விளைவாகவே, முன்பெல்லாம் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் மிக சொற்பமானவர்களே பங்கெடுத்து வந்த சூழல் மாறி தற்போதைய போராட்டங்களில் நூற்றுக்கணக்கானோர் பங்கெடுக்கும் சூழல் உருவாகியுள்ளது.
அறிக்கை அரசியல் TO கள அரசியல்:
செல்வப்பெருந்தகை தலைமை ஏற்பதற்கு முன், தமிழ்நாட்டின் பிரச்சனைகளுக்கும் பாஜகவின் நடவடிக்கைகளுக்கும் எதிரான நடவடிக்கை என்பது அறிக்கை வடிவமாகவே இருந்து வந்திருக்கிறது. எதிர்ப்பு போராட்டங்களும் பெரும்பாலும் சத்தியமூர்த்திபவன் வளாகத்திற்குள்ளேயே முடிந்துவிடும் சூழல் இருந்ததை மாற்றி களத்தில் இறங்கி போராட வைத்திருக்கிறார் செல்வப்பெருந்தகை. தற்போதைய சூழலில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மாவட்ட தலைநகரங்களில் நடக்கும் போராட்டங்களிலும் காங்கிரஸாரின் பங்கு கணிசமாக அதிகரித்துள்ளது. இது சோர்வாகியிருந்த காங்கிரஸ் தொண்டர்களை தட்டி எழுப்பும் வகையில் இருந்து வருகிறது. செல்வப்பெருந்தகை பொறுப்பேற்றதற்கு பின் மக்கள் பிரச்சனைகளுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டங்களை முன்னெடுத்துள்ளார். அனைத்தும் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. காங்கிரஸ் என்பது “பண்ணையார் கட்சி” என்ற சொல்லாடல் இன்று மறைந்து போகும் அளவிற்கு மக்களோடு மக்களாக காங்கிரசார் நிற்கும் சூழலை ஏற்படுத்தியதில் முக்கியப்பங்கு செல்வப்பெருந்தகையின் முயற்சிகளை சேரும்.
கட்சிக்குள் இருந்த சாதி, மத பாகுபாடுகளை களைந்திருப்பது:
காங்கிரசுக்குள் சாதிய ரீதியாக, மத ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களும் சிறுபான்மையினரும் புறந்தள்ளப்பட்டு வந்த சூழல் மாறியிருக்கிறது என்கின்றனர் சத்தியமூர்த்தி பவனில் இருப்பவர்கள். ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் என்பதாலேயே செல்வப்பெருந்தகை சந்தித்து வந்த நெருடல்களை அவரும் உடைத்து தன் தலைமையில் மற்ற நிர்வாகிகளுக்கும் அந்த நெருடல்களை சரி செய்துள்ளார். ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அதற்கு ஒரு உதாரணம், தகவல் தொழில்நுட்ப பிரிவை ஒரு சிறுபான்மையினரின் கையில் கொடுத்திருப்பது. இதில் அவருக்கு எதிரான நடவடிக்கைகள் ஓய்ந்துவிட்டதா என்றால் இல்லை. அது தொடர்ந்த வண்ணமே இருக்கிறது. ஆனால், அதையெல்லாம் தாண்டியே அவர் செயல்பட்டு வருகிறார். அவர் மீதான டெல்லி தலைமையை நோக்கிய சில நிர்வாகிகளின் புகார்களுக்கு சாதிய பார்வை முக்கிய காரணம் என்கின்றனர் செல்வப்பெருந்தகைக்கு நெருக்கமானவர்கள். அதையெல்லாம் அறிந்திருப்பதால் தான் கார்கேவும் ராகுலும் செல்வப்பேருந்தைகையை மாற்றாமல் அவருக்கு துணை நிற்கிறார்கள்.
குற்றச்சாட்டும் அதற்கு மாறான நிலவரமும்:
“செல்வப்பெருந்தகை திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார்” என்ற குற்றச்சாட்டு அவரை நோக்கி பொதுவாக சுமத்தப்படுகிறது. அதற்காக சில காரணங்களை குற்றம் சுமத்துபவர்கள் கட்சிக்குள்ளும் பொது வெளியிலும் வைத்து வருகிறார்கள். ஆனால், அதுவே மாறாக காங்கிரஸ் கட்சியின் நிலை தற்போது எப்படி மாறியிருக்கிறது என்பதை பார்க்க வேண்டியுள்ளது. மேற்கூறிய செல்வப்பெருந்தகையின் முயற்சிகள் காரணமாக கட்சி வளர்ந்துள்ளதன் அடிப்படையிலேயே திமுகவுக்கு எதிராக, திமுகவுக்கு இத்துணை நெருக்கடி கொடுக்கும் அளவிற்கு காங்கிரசால் “ஆட்சியில் பங்கு வேண்டும்” என்ற கோஷத்தை வலிமையாக முன்னெடுக்க முடிகிறது. “கிராமப்புறங்களில் கட்சி வளர்ந்துள்ளதை ராகுலுக்கு காட்டுவேன்” என கிரீஷ் சோடங்கரால் உறுதியாக சொல்ல முடிகிறது. ஆட்சியில் பங்கு என்ற கோஷம் சட்டமன்ற தேர்தலுக்காக மட்டுமல்லாமல், உள்ளாட்சி தேர்தல்கள், கூட்டுறவு சங்க தேர்தல் வரை பங்கு வேண்டும் என்ற அளவிற்கு காங்கிரஸாரால் அழுத்தமாக கேட்க முடிகிறது. செல்வப்பெருந்தகையும் அவரது செயல்பாட்டையும் தவிர்த்துவிட்டு இத்தகைய குரல்கள் எழுப்புவது என்பது சாத்தியமற்றது.
திமுக கூட்டணிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசுபவர்களை கூட எடுத்தும் கவிழ்த்தோம் என நடவடிக்கை எடுக்காமல் ஜனநாயக முறைப்படி பேச அனுமதிப்பதும் தலைமைக்கான பண்பு என்கின்றனர் காங்கிரசை உற்று நோக்கும் சிலர். தேர்தல் நேரத்தில் தொகுதிகளை விட்டுக்கொடுப்பது, அழுத்தமாக தொகுதி பங்கீட்டை பேசாதது போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்துபவர்களுக்கு ஒன்றை நினைவுபடுத்த வேண்டியுள்ளது, தொகுதிப்பங்கீட்டில் இறுதி முடிவு எடுப்பது டெல்லி தலைமைகளை சார்ந்தது. மேலும், இன்று கடந்த காலங்களை போல் அல்லாமல் திமுகவோடு இந்த அளவிற்கு மோதி வருகிறது காங்கிரஸ்; அதுவும் பீகார் தோல்விக்கு பிறகும்.
ஆக, மொத்தத்தில் இருக்குமிடம் தெரியாமல் இருந்த தமிழ்நாடு காங்கிரசின் நிலை இன்று நிமிடத்திற்கு நிமிட பிரேக்கிங் செய்திகளிலும், தலைப்பு செய்திகளிலும் வருமளவிற்கு பின்னணியில் கட்சி வலிமையடைந்திருப்பது செல்வப்பெருந்தகையின் தலைமையின் கீழ் தான் என்பதை நினைவில் கொள்ளவேண்டியிருக்கிறது .
