2026 சட்டமன்ற தேர்தலில் அதிகமான திமுக தலைமையிடம் அதிக சீட்டுகள் கேட்பது குறித்து நாளை நடைபெற உள்ள பொதுக்குழுவில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மதிமுக வின் 31ஆவது பொதுக்குழு நாளை ஈரோட்டில் நடைபெற உள்ளதாகவும் அந்த பொதுக்குழுவில் சிறந்த முடிவுகள் தீர்மானங்களாக அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

ஆங்கில மொழி குறித்து அமித்ஷா பேசியது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர் அவரது உளறல்களுக்கு எல்லையே இல்லை என்றும் ஆங்கிலம் உலக மொழி, ஆங்கிலம் தெரிந்தால் உலகில் பல நாடுகளுக்கும் சென்று வளரலாம். அதனால்தான் பேரறிஞர் அண்ணா தாய் தமிழும் ஆங்கிலமும் தான் தமிழ்நாட்டில் இருக்கும் என்று கூறியதாகவும் அதுமட்டுமின்றி இந்தியாவில் உள்ள மாநில மொழிகள் அனைத்தும் ஆட்சி மொழிகள் ஆக்க வேண்டும் என்று மாநிலங்கள்வையிலேயே அவர் பேசியதாகவும் தெரிவித்தார்.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து டிஆர்பி ராஜா கேலிச்சித்திரம் வரைந்ததாக எழுந்து வரும் புகார்கள் குறித்தான கேள்விக்கும் வெளியில் நடமாட முடியாது என்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறியது குறித்தான கேள்விக்கும் பதில் அளித்த வைகோ, வெளியில் நடமாட முடியாது என்று கூறுகின்ற அளவிற்கு வலிமையோ உரமோ இல்லாத கூட்டம் அவர்கள் என்றும் நயினார் நாகேந்திரன் நல்ல நண்பர், இந்த பொறுப்பிற்கு வந்த பிறகு பொருத்தமற்ற முறையில் கற்பனையாக சிலவற்றை பேசி வரும் இந்த போக்கை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். அதுமட்டுமின்றி உதயகுமாருக்கு முன்பே நயினார் நாகேந்திரன் இதனை கூறியிருந்ததாக தெரிவித்தார்.

பாமக கட்சி விவகாரம் குறித்தான கேள்விக்கு தந்தைக்கும் மகனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருப்பதால் இரண்டு அணி போன்று தெரிகிறது காலப்போக்கில் அதனை எல்லாம் மாற்றிக் கொண்டு கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றாவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்தார்.

2017 ஆம் ஆண்டு திமுகவுடன் கரம் கோர்ப்பது என்று எடுத்த தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் வேறு எந்த கட்சியுடன் சேர்வதற்கான அவசியமும் இல்லை இதைப் பற்றி ரகசியமாக பேசுகின்ற பழக்கமும் எங்களுக்கு இல்லை என தெரிவித்தார். கூட்டணி குறித்து திமுக தலைமை தான் முடிவெடுக்கும் எனவும் வைகோ தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version