தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் நாளை (ஏப்ரல் 11) பரப்புரை மேற்கொள்ளத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் திட்டமிட்டிருந்தனர். ஒரே நாளில், ஒரே மாவட்டத்தில் இரு முக்கியத் தலைவர்களும் பிரசாரம் செய்வது பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ரீதியாகச் சவால்களை ஏற்படுத்தும் என்பதால், காவல்துறையினர் ஒருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கத் தீர்மானித்தனர். இதில், தவெக தரப்பில் முன்னதாகவே விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதைக் கணக்கில் கொண்டு, விஜய்யின் பரப்புரைக்குக் காவல்துறை பச்சைக்கொடி காட்டியுள்ளது.
இதன் காரணமாக, நாளை கடலூரில் நடைபெறவிருந்த உதயநிதி ஸ்டாலினின் தேர்தல் பிரசாரத்துக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய்யின் வருகைக்காகக் கடலூர் மாவட்டத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், உதயநிதியின் பரப்புரை வேறொரு தேதிக்கு மாற்றப்படும் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாகப் பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் விஜய்க்கு அனுமதி மறுக்கப்பட்டபோது தவெகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது கடலூரில் உதயநிதியின் பயணம் மாற்றப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக காரணங்களும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் தேவையும் கருத்தில் கொண்டு, அவரது பிரச்சாரம் மற்றொரு நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் இத்தகைய மாற்றங்கள் நடைபெறுவது வழக்கமான ஒன்றாக கூறப்படுகிறது.
