தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. கடந்த ஒரு மாத காலமாக நீடித்த அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் மற்றும் கூட்டணிக் கணக்குகளுக்கு இன்று விடை கிடைக்கவுள்ளது. தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டு வரும் நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் முன்னிலை நிலவரங்கள் தெரியவரும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை 234 தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதியே முடிவடைந்தாலும், மற்ற மாநிலங்களின் தேர்தல் அட்டவணையால் வாக்கு எண்ணிக்கைக்காக மக்கள் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி மீண்டும் அரியணையைத் தக்கவைக்குமா அல்லது அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடிக்குமா என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாகப் போட்டியிட்டுள்ளது தேர்தல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்களின் வாக்குகள் யாருக்குச் சாதகமாகத் திரும்பியுள்ளது என்பது இன்று மாலைக்குள் தெளிவாகிவிடும்.

62 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ள நிலையில், அடுத்த 30 நிமிடங்களில் தபால் வாக்குக்ளில் முன்னிலை வகிப்பது யார் என்பது தெரியவரும். தபால் வாக்குகள் எண்ணும் பணி தாமதமாகும் மையங்களில் மற்றொரு பகுதியில் இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடரும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அண்டை மாநிலமான கேரளாவில் ஆளும் இடதுசாரி முன்னணி (LDF) வரலாற்றுச் சாதனையைத் தொடருமா அல்லது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) கம்பேக் கொடுக்குமா என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.

அதேபோல், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையிலான அரசியல் யுத்தத்தின் முடிவு என்ன என்பதும், அசாம் மற்றும் புதுச்சேரியில் நிலவப்போகும் அரசியல் மாற்றங்களும் இன்று மாலைக்குள் இறுதி வடிவம் பெறும். 5 மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version