தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனுக்கு பத்து நாட்கள் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூன் 20-ம் தேதி ஆத்தூரில் நடைபெற்ற கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசியிருந்தார். “நான் ஒரு வியாபாரி; வருபவர்களின் பார்வையை வைத்தே அவர்கள் என்ன தேவைக்காக வருகிறார்கள் என்பதைக் கண்டுபிடித்துவிடுவேன். சட்டமன்றத்தில் முதலமைச்சரின் முகம், ‘சினிமாவில் நடிகைகளுடன் ஜாலியாக இருந்த என்னை, அரசியலில் கொண்டு வந்து மாட்டிவிட்டுவிட்டார்களே’ என்பது போல இருக்கிறது” என அவர் விமர்சித்திருந்தார்.

இந்த பேச்சுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக வெற்றிக் கழகத்தின் ஆத்தூர் நகர செயலாளர் செல்வம், ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, அனிதா ராதாகிருஷ்ணன் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 352 மற்றும் 353(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. தீர்ப்பு வெளியான ஒன்றரை மணி நேரத்திலேயே, ஆத்தூர் பேரூராட்சியில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த அனிதா ராதாகிருஷ்ணனை ஆறுமுகநேரி காவல் ஆய்வாளர் ரென்னிஸ் தலைமையிலான போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். இதைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் திமுகவினர் சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

கைது செய்யப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன், மருத்துவப் பரிசோதனைக்குப் பின் இரவு 11 மணிக்கு மேல் திருச்செந்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சிதம்பரம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்ட நீதிபதி, பத்து நாட்கள் ஆத்தூர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், மூன்று நாட்களுக்குள் நீதிமன்றத்தில் முறையான பிணையம் தாக்கல் செய்யவும் அறிவுறுத்தினார்.

நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், “திமுக தொண்டர்கள் எதற்கும் அஞ்ச மாட்டார்கள், அதுதான் வரலாறு. இன்னும் ஆறு மாத காலத்திற்குள் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும்” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version