பொங்கல் பண்டிகைக்கு பிறகு விருப்ப மனு விநியோகத்தை திமுக தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாத தொடக்கத்தில் நடக்க வாய்ப்புகள் உள்ளது. இதனால் அத்தனை கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அந்த வகையில் அதிமுக தரப்பில் சில மாதங்களுக்கு முன்பாகவே பிரச்சாரம் தொடங்கப்பட்டுவிட்ட சூழலில், தற்போது விருப்ப மனுக்கள் விநியோகம் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கிய இந்த விருப்ப மனு விநியோகம், டிசம்பர் 23ஆம் தேதி இன்று வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதிமுக சார்பாக தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து கொடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில், ஆளும் கட்சியான திமுகவின் விருப்ப மனு விநியோகம் எப்போது தொடங்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு பிறகு விருப்ப மனு விநியோகத்தை திமுக தொடங்க உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏனென்றால், ஒருபுறம் ஜனவரி 10 ம் தேதி வரை என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற பரப்புரையில் திமுக நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். மற்றொரு பக்கம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியிலும் திமுக நிர்வாகிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்தப் பணிகள் எல்லாம் நிறைவடைந்த பிறகு விருப்ப மனு விநியோகத்தை திமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என திமுக தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version