தமிழக அரசியலில் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், நடிகர் விஜய் தனது ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியின் மூலம் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தித் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற சமத்துவக் கொள்கையுடன் களமிறங்கியுள்ள அவர், பிப்ரவரி 2024-இல் கட்சியை அறிவித்தது முதல் தற்போது தேர்தல் களம் வரை தமிழக அரசியலில் பேசுபொருளாகியுள்ளார். வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில், திராவிட மற்றும் தேசியக் கட்சிகளுக்கு மாற்றாகத் தனித்துப் போட்டியிடும் விஜய்யின் இந்த அரசியல் பாய்ச்சல், இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன் ஒருபகுதியாக, நேற்று சென்னையில் நடைபெற்ற தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், தமிழகப் பெண்கள் அனைவரும் அடுத்த ஏழு நாட்களுக்குத் தங்கள் வீட்டு வாசலில் கட்சியின் அடையாளமான “விசில்” சின்னத்தை கோலமாக வரைய வேண்டும் என அன்பான கோரிக்கை விடுத்திருந்தார்.
விஜய் விடுத்த வேண்டுகோளை ஏற்று, அக்கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் இன்று காலை முதலே தங்கள் வீடுகளின் முன்பு “விசில்” சின்னத்தை கோலமாக வரைந்து அசத்தி வருகின்றனர்.
விஜய்யின் பேச்சைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிகாலையிலேயே தவெக ஆதரவாளர்கள் தங்கள் வாசல்களில் வண்ணமயமான விசில் கோலங்களை இட்டனர். இந்தக் கோலங்களுடன் தவெக கொடி மற்றும் விஜய்யின் உருவப்படங்களையும் வரைந்து தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் பல ஊர்களில் உள்ள தெருக்கள் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் களமாகவே மாறியுள்ளன. சாதாரண மக்கள் முதல் கட்சி நிர்வாகிகள் வரை அனைவரும் இதில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.
சமூக வலைதளங்களிலும் இந்த “விசில் கோலம்” பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. தங்களது வீட்டின் முன்பு வரைந்த கோலங்களைப் புகைப்படம் எடுத்து ‘X’ , இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் #WhistleKolam என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டு வருகின்றனர். இதனால் இந்த ஹேஷ்டேக் தற்போது இணையத்தில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது. விஜய்யின் இந்த நூதனமான பிரச்சார உத்தி, தேர்தல் களத்தில் தவெக-விற்கான கவனத்தை ஈர்க்கும் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
