அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில், கட்சியை விட்டு வெளியேறிய முன்னாள் நிர்வாகிகள் மற்றும் அதிருப்தியாளர்களைக் குறிவைத்துத் தகுந்த வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் கோட்டையாகக் கருதப்படும் போடிநாயக்கனூர் தொகுதியில், அவரை எதிர்த்து அதிமுக சார்பில் வி.டி. நாராயணசாமி போட்டியிடுகிறார். அதேபோல், ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த வைத்திலிங்கம் வெற்றி பெற்ற ஒரத்தநாடு தொகுதியில் எம். சேகர் என்பவரும், மனோஜ் பாண்டியனின் சொந்த ஊரான ஆலங்குளம் தொகுதியில் பிரபாகரன் என்பவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

விஜய்யின் தவெகவில் இணைந்த மூத்த அரசியல்வாதி கே.ஏ. செங்கோட்டைனின் சொந்தத் தொகுதியான கோபிசெட்டிபாளையம் தொகுதியில், இந்த முறை அவருக்குப் பதிலாக  அதிமுக சார்பில் வி.பி. பிரபு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. மேலும், அண்மையில் மீண்டும் அதிமுகவில் இணைந்த டாக்டர் சரவணன் மதுரை வடக்கு தொகுதியிலும், முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் சோழவந்தான் தொகுதியிலும் போட்டியிட உள்ளனர். அதிருப்தி கோஷ்டியினரின் செல்வாக்கை முறியடிக்கவும், தங்கள் பலத்தை நிரூபிக்கவும் எடப்பாடி பழனிசாமி இந்த வியூகத்தை வகுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version