அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோடாலி கிராமத்தில் டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம்சாட்டி உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்து, மதுக்கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாணவிகளின் கைகளில் காயம் ஏற்படும் வகையில் காவல்துறையை ஏவி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கல்விக்கூடங்களுக்கு அருகிலுள்ள மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டதாக அரசு கூறிய நிலையில், கோடாலி கிராமத்தில் அந்த மதுக்கடை எவ்வாறு செயல்பட்டது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் வீதியில் இறங்கி போராடும் நிலை ஏற்பட்ட பிறகும் மதுக்கடையை மூடாமல், அவர்கள்மீது காவல்துறையை ஏவி தாக்குதல் நடத்தியிருப்பது கொடுங்கோன்மையான செயல். இதுதானா மக்கள் எதிர்பார்த்த மாற்றம்?” என்றும் விமர்சித்துள்ளார்.
“கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிப்பதாகக் கூறும் அரசு, டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதில் ஏன் தயக்கம் காட்டுகிறது? முந்தைய திமுக, அதிமுக அரசுகளைப் போலவே தவெக அரசும் மது விற்பனையைத் தொடர்வது ஏமாற்றமளிக்கிறது” என்றும் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
