தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. கூட்டணி கணக்குகள் ஒருபுறம் சென்று கொண்டு இருக்கின்றன. மறுபுறம் பிரபலங்கள் போட்டியிடும் தொகுதிகள் எவை? என்ற விவாதமும் நடந்து வருகின்றன. ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு முதல் தேர்தலாக 2026 தேர்தல் அமைந்து இருக்கிறது. ஆங்கிலத்தில் அவரது பெயரின் முதல் எழுத்தான வி என்ற எழுத்தில் வரும் தொகுதியில்தான் அவர் முதல் தேர்தலை சந்திப்பார் என பேசப்பட்டது. அந்த வகையில் தென்மாவட்டங்களில் விருதுநகர் தொகுதியும் விவாதப்பொருளாக இருந்தது.
இருப்பினும், மதுரையில் வென்றால், அரசியல் களத்தில் ஒரு வரலாறாக பேசப்படும் என்பதால் அவர் மதுரையில் போட்டியிடலாம் என்றும் கூறப்பட்டது. ஏனென்றால், சென்டிமென்ட் ஆக எம்.ஜி.ஆர். போட்டியிட்டு வென்ற மதுரை மேற்கு தொகுதியில் அவர் களம் இறங்க இருக்கிறார் என்றும் கூறப்பட்டது.
இதுதொடர்பாக மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மதுரை கிழக்கு தொகுதி வேட்பாளர் யார் தெரியுமா? விஜய். ஆம், நான்தான். மதுரை மேற்கு வேட்பாளர் விஜய், மதுரை மத்தி வேட்பாளர் விஜய், திருமங்கலம் வேட்பாளர் விஜய். உசிலம்பட்டி வேட்பாளர் விஜய். அதாவது தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளுக்கும் நானே வேட்பாளர். அவ்வாறு நினைத்துதான் மக்களாகிய நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றார். ஆனாலும் விஜய் போட்டியிடும் தொகுதி குறித்து இன்னும் எந்த அறிவிப்பும் வரவில்லை.
இந்தநிலையில், இதுதொடர்பாக மீண்டும் சமூக வலைதளங்களில் பேச்சு அடிப்பட்டு வருகிறது. அதாவது விஜய் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறர் என்ற எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் அவர் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இத்தொகுதியில் திமுகவில் உள்கட்சிபூசல் நிலவுகிறதாம். இது விஜய்க்கு சாதகமாக அமையும் என்பதால், இதுகுறித்து தீவிர ஆலோசனையில் தவெக இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஒரு வேளை விஜய் இந்த தொகுதியில் போட்டியிட்டால் நாடு முழுவதும் கவனிக்கப்படும் தொகுதியாக மாற வாய்ப்புள்ளது.
