மென்பொருள் நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவால் வேலை இழப்பு ஏற்படாது என்றும், மனித ஆற்றலை நம்பித்தான் ஐ டி துறை இயங்க முடியும் என்றும் ஜோஹோ நிறுவன தலைவர் சார்லஸ் காட்வின் கூறியுள்ளார்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வேலைவாய்ப்புகளைக் குறைக்கும் என்பது ஒரு தவறான கருத்து என்றும், மனித ஆற்றலை நம்பியே அனைத்து தொழில்நுட்பங்களும் செயல்படுகின்றன என்றும் ஜோஹோ நிறுவனத்தின் தலைமை மனிதவள மேம்பாட்டுத் துறைத் தலைவர் சார்லஸ் காட்வின் தெரிவித்துள்ளார். மேலும், எந்தத் துறையிலும் 12 மணி நேர வேலை என்பது தேவையற்றது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
கோவை மாவட்டம் சூலூர், நீலாம்பூர் அருகிலுள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சார்லஸ் காட்வின் கலந்துகொண்டார். இவருடன் கல்லூரித் தலைவர் கதிர், செயலாளர் லாவண்யா கதிர், மற்றும் கல்லூரி முதல்வர் கற்பகம் ஆகியோரும் பங்கேற்று மாணவர்களை வரவேற்றனர். இந்நிகழ்வில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சார்லஸ் காட்வின், “AI தொழில்நுட்பம் என்பது தகவல் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்த மட்டுமே பயன்படும். அதை முழுமையாகச் சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மனித ஆற்றலே அனைத்து தொழில்நுட்பங்களுக்கும் அடிப்படையாக உள்ளது. மேலும், தகவல் தொழில்நுட்பத் துறையில் 12 மணி நேர வேலை என்பது நடைமுறையில் இல்லை. எந்தத் துறையிலும் இவ்வளவு நீண்ட நேரம் வேலை செய்யத் தேவையில்லை,” என்று திட்டவட்டமாகக் தெரிவித்தார்
