பாஜக கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் தொகுதி மறுவரையறை (Delimitation), தமிழகத்தை கடுமையாக பாதிப்பதுடன், தமிழக மக்களின் அரசியல் அதிகாரத்தையும் பறிக்கும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாமின் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை வந்த ராகுல் காந்திக்கு, சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், மாமல்லபுரத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய ராகுல் காந்தி, “பாஜக தொகுதி மறுவரையறையை கொண்டு வர திட்டமிட்டு வருகிறது. அது தமிழகத்தை கடுமையாக பாதிக்கும். அதோடு, தமிழக மக்களிடமிருந்து அரசியல் அதிகாரத்தைப் பறித்துவிடும்,” என்றார்.
மேலும், “நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை முயற்சியை ஒவ்வொரு மாநிலக் கட்சியும், தேசியக் கட்சியும் இணைந்து தோற்கடிக்க வேண்டும். தமிழர்கள் யாரும் தொகுதி மறுவரையறையை ஆதரிக்கக் கூடாது. அதை ஆதரிப்பவர்கள் ‘எட்டப்பர்கள்’. இது அரசியல் பிரச்சினை மட்டுமல்ல; மக்களின் எதிர்காலம் தொடர்பான முக்கியமான பிரச்சினை,” என்று அவர் தெரிவித்தார்.

