காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான நீண்டகால பிரச்சினை மீண்டும் உச்சம் பெற்றுள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய் பெங்களூரு செல்லத் திட்டமிட்டுள்ளார். இதற்கு கர்நாடக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கன்னட சாலுவாலி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தபோது, “தமிழக முதலமைச்சர் விஜய் பெங்களூருக்கு வந்தால் விமான நிலையத்தை முற்றுகையிடுவோம். தமிழகத்துக்கு தண்ணீர் தேவையில்லை என அவர் கூறினால் மட்டுமே வரவேற்போம்” என்று எச்சரிக்கை விடுத்தார்.
தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்குவதை எதிர்த்து ஆகஸ்டு 13-ம் தேதி கர்நாடகா முழுவதும் முழு அடைப்பு (பந்த்) நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த போராட்டம் நடைபெறும். இந்த ஆண்டு கர்நாடகத்தில் போதிய மழை பெய்யாததால் அணைகளில் நீர் இருப்பு குறைந்துள்ளது. இதனால் தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு முன்னெடுத்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு தொடக்கம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண விரும்பும் முதலமைச்சர் விஜய், கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமாருக்கு கடிதம் அனுப்பி சந்திப்பு கோரியுள்ளார். இதன்படி வரும் 3-ம் தேதி (திங்கட்கிழமை) பெங்களூரு செல்ல அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் தமிழக அரசியல் கட்சிகள் பல இந்த பயணத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தமிழக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், “முதலமைச்சர் கர்நாடகா செல்வது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக இரு மாநிலங்களும் பல தசாப்தங்களாக மோதல் போக்கைக் காட்டி வரும் நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுகள் இருந்தும் பிரச்சினை தொடர்ந்து வருகிறது. மழைப்பொய்த்த காலங்களில் இந்த பிரச்சினை மேலும் தீவிரமடைகிறது.
