மாநிலங்களவையில் பொதுத் தேர்வுகள் (திருத்த) மசோதா, 2026 குறித்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேர்வுத் தாள் கசிவு பிரச்சினையைத் தடுக்க அரசு கொண்டு வந்துள்ள நடவடிக்கைகள் போதுமானவை அல்ல என்று விமர்சித்தார்.
அவர் பேசுகையில், “தேர்வுத் தாள் கசிவால் எத்தனை அப்பாவி மாணவர்கள் பாதிக்கப்பட்டனர், எத்தனை பேர் தாக்கப்பட்டனர், எத்தனை பெற்றோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மனவேதனை அடைந்துள்ளனர். இதை வெறும் புள்ளிவிவரங்களாக மட்டும் பார்க்க முடியாது” என்றார்.
மேலும், “பொதுத் தேர்வுகள் (திருத்த) மசோதா, 2026-ல் அபராதத்தை அதிகரித்தல், கடுமையான தண்டனைகள், சிறப்பு பணிக்குழு, விரைவு நீதிமன்றங்கள் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இவை மட்டும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. தேர்வுகளை எவ்வாறு வெளிப்படையாக நடத்தப் போகிறீர்கள், தாள் கசிவு இல்லாமல் எவ்வாறு பாதுகாப்பீர்கள் என்பதுதான் முக்கியம்” என்று தெரிவித்தார்.
அத்துடன், “இதுபோன்ற வலுவான சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று 2024-ஆம் ஆண்டிலேயே நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால் அப்போது அரசு அதை ஏற்கவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது செய்யும் பணியை அப்போதே ஏன் செய்யவில்லை?” என்றும் மத்திய அரசை கார்கே கேள்வி எழுப்பினார்.
