மாணவர்கள் தங்களது உரிமைகளுக்காக அமைதியான முறையில் போராடுவது ஜனநாயக விரோதமான செயல் அல்ல என்றும், தற்போது மாணவர்களிடமும் நாடாளுமன்றத்திலும் நடைபெற்று வரும் நடவடிக்கைகள்தான் ஜனநாயக விரோதமானவை என்றும் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மாணவர்கள் உண்மையான பிரச்சினைகளுக்காக போராடுகிறார்கள். வினாத்தாள் கசிவு சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடக்கின்றன. மாற்றத்தை அவர்கள் கோருகிறார்கள். அமைதியான போராட்டத்தில் ஜனநாயக விரோதம் எதுவும் இல்லை. ஆனால் மாணவர்களிடமும் நாடாளுமன்றத்திலும் நடப்பதுதான் ஜனநாயக விரோதம்” என்றார்.

மேலும், “மாணவர்கள் தங்களது உரிமைகளைக் கோருகின்றனர். அவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை. கல்விக்கான மத்திய அரசின் பட்ஜெட் ரூ.1.4 லட்சம் கோடி. ஆனால் அதே நேரத்தில் அதானி, அம்பானி நிறுவனங்களுக்கு ரூ.16 லட்சம் கோடி மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன” என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

கடந்த ஜூலை 20-ஆம் தேதி காக்ரோச் ஜனதா கட்சி (CJP) டெல்லியில் நடத்திய ‘சன்சத் சலோ’ போராட்டத்தின் போது காவல்துறை நடவடிக்கை எடுத்தது. போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதுடன், கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, புதன்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version