எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் ஹமீத் ஃப்ரோஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசுப் பள்ளிகளில் வாரம் ஒருமுறை மாணவர்களுக்குச் சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்து முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ள செய்திகள் வெளியாகியுள்ளன.
பள்ளி மாணவர்களுக்குப் புரதச்சத்து எளிதில் கிடைக்க வேண்டும் என்ற நல்நோக்கத்தோடு, மதிய உணவில் சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்து அமைச்சர் தெரிவித்திருக்கும் கருத்து பாராட்டுக்குரியதுதான். மாணவர்களின் ஊட்டச்சத்தின் மீது அரசு காட்டும் இந்த அக்கறை வரவேற்புக்குரியது என்றாலும், இதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களையும் ஆபத்துகளையும் நாம் அலட்சியப்படுத்திவிட முடியாது.
இன்றைய சூழலில், பள்ளிகளில் வழங்கப்படும் முட்டைகளிலேயே பல நேரங்களில் கெட்டுப்போன முட்டைகள் மாணவர்களுக்குச் சென்றடைவதாகத் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. முட்டைக்கே இந்த நிலை என்றால், கோழி இறைச்சியைப் பராமரிப்பதும், சுகாதாரமாகச் சமைத்து வழங்குவதும் பெரும் சவாலாக இருக்கும்.
அதற்குப் பதிலாக, வீடுகளில் பயன்படுத்துவது போல தரமான அரிசி, காய்கறிகள், பருப்பு வகைகள், சுண்டல் மற்றும் சிறுதானியங்கள் போன்ற ஆரோக்கியமான இயற்கை உணவுகளை மாணவர்களுக்குத் தடையின்றி வழங்கலாம். இவை கெட்டுப்போகாமல் இருப்பதுடன், குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் பாதுகாப்பாகக் கொண்டு சேர்க்கும்.
எனவே, நல்நோக்கத்தோடு முன்வைக்கப்பட்ட இந்தச் சிக்கன் பிரியாணி யோசனையைக் கைவிட்டு, தரமான காய்கறிகள் மற்றும் சத்தான இயற்கை உணவுகள் மூலமாகவே மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் எதிர்காலத்தை வலுப்படுத்த அரசு முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
