திண்டுக்கல், கனிமவளத்துறை உதவி இயக்குநர் செல்வசேகர் தலைமையிலான குழுவினர் திண்டுக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கனிமவள தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குளத்து மண் ஏற்றி வந்த 2 டிராக்டர்களை தடுத்து நிறுத்தி விசாரணை செய்த போது, 2 டிராக்டரில் வந்த ஓட்டுநர்கள் தப்பியோடினர். குளத்திலிருந்து எடுத்துவரப்பட்ட மண்ணுக்கு நடை சீட்டு இல்லை என்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
குறிப்பாக விவசாயத்திற்கு வண்டல் மண் எடுப்பதாக பர்மிட் போடப்பட்டிருந்த நிலையில், திருட்டுத் தனமாக மண் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து கனிமவளத்துறை அதிகாரிகள் மண்ணுடன் இருந்த 2 டிராக்டர்களை பறிமுதல் செய்து தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டுத்தனமாக மண் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபர்களை தேடி வருகின்றனர்.