தி.மு.க. ஆட்சியில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை திசை திருப்பவே தன்னைப் பற்றி கேலிச்சித்திரங்கள் வெளியிடப்படுகின்றன என்று குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மத்திய அமைச்சர் அமித் ஷா ஆங்கிலம் பேசுவோர் வெட்கப்படும் காலம் வரும் என்று கூறியது குறித்த கேள்விக்கு, “தாய்மொழி அனைவருக்கும் முக்கியம். தாய்மொழிக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை விட ஆங்கிலத்திற்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்ற பொறுப்பில்தான் அமித் ஷா பேசியிருக்கிறார்” என்று எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து உண்டு என்றும் அவர் கூறினார்.
கீழடி அகழாய்வு குறித்த கேள்விகளுக்கு, அ.தி.மு.க.முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் ஏற்கனவே தெளிவாக விளக்கமளித்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். “அ.தி.மு.க. ஆட்சியில் கீழடி அகழாய்வுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் முழுமையாகத் தெரிவிக்கப்பட்டுவிட்டதாக” அவர் குறிப்பிட்டார்.
மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு குறித்த கேள்விக்கு, “ஒவ்வொரு அமைப்பும் அவரவர் விருப்பப்படும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயகத்தின் உரிமை. அந்த அடிப்படையில், ஜனநாயக நாட்டில் அவரவர் விரும்பும் கடவுளை, மாநாட்டின் மூலமாக ஆண்டு அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடத்துகிறார்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று அவர் கூறினார்.
தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் பொதுவெளியில் ஆபாசமாகப் பேசுவது குறித்த கேள்விக்கு, “நாங்கள் ஏற்கனவே இதுகுறித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளோம். தி.மு.க.வைப் பொறுத்தவரை மக்கள் இடையே மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்களின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதையெல்லாம் திசை திருப்புவதற்காக, இப்படி கேலிச்சித்திரம், அவதூறு கருத்துக்களை வெளியிடுவது வாடிக்கையாகிவிட்டது” என்று எடப்பாடி பழனிசாமி சாடினார். மேலும், “2026 சட்டமன்றத் தேர்தலில் இதற்கான பதில் கிடைக்கும் என்றும், மக்கள் இதற்கான தக்க தண்டனை வழங்குவார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச யோகா தினம் குறித்த கேள்விக்கு, “யோகாசனம் என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று. அதை பாரதப் பிரதமர் முன்னின்று நடத்துகிறார். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.