தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வருவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி, தற்போது பரவி வருவது புதிய வகை வைரஸ் அல்ல, சாதாரண Influenza A காய்ச்சலே. காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரில் 50% பேருக்கு Influenza A பாதிப்பு மட்டுமே உள்ளதாகவும், அதற்கு அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்துள்ளது.
சென்னை மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகரிப்பு
சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தினமும் 500-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, இருமல், தொண்டை வலி, உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன.
கொரோனா கால அனுபவம் காரணமாக பொதுமக்கள் தேவையற்ற பீதியில் ஆழ்ந்து வருவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
டெங்கு பரவல் எச்சரிக்கை
சுகாதாரத்துறை மேலும் தெரிவித்ததாவது:
ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் டெங்கு பாதிப்பு இயல்பாகவே இருமடங்காக அதிகரிக்கக்கூடும்.
எனவே வீடு, சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்க விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவது அவசியம்.
ஆலோசனை கூட்டம்
தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவல் தொடர்பாக சுகாதாரத்துறை செயலர் செந்தில் குமார் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பல மாவட்ட சுகாதார அதிகாரிகள் பங்கேற்று, காய்ச்சல் பாதிப்பு அதிகமாகியுள்ள பகுதிகள் குறித்து விவாதித்தனர்.