முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு அளித்த பேட்டியிலிருந்து….
அதிமுகவில் 53 ஆண்டுகாலம் பயணித்த செங்கோட்டையனை நீக்கியது சரியான முடிவா?
செங்கோட்டையன் அண்ணன் ஒரு சீனியர். கட்சியில் மனஸ்தாபங்கள் இருந்தால், ஈகோ பார்க்காமல், தனிப்பட்ட முறையில் பொதுச்செயலாளரைச் சந்தித்து அதனை கூறி இருக்க வேண்டும். அதை விடுத்து, அதிமுக-வை எதிர்க்க வேண்டும் என்று செயல்படும் ஒரு குரூப் உடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்து பேட்டி கொடுத்தது சரியா?
உங்களுக்கும் மனக்குறை உள்ளது என்று சொல்லி இருக்கிறீர்களே… அதை பொதுச்செயலாளரிடம் எப்போது சொல்லப் போகிறீர்கள்?
எனக்கு மனக்குறையே இல்லை. அப்படியே இருந்தாலும், அதை உங்களிடம் எப்படிச் சொல்வேன்?
தன்மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சொன்ன எஸ்டிஎஸ் போன்றவர்களைக் கூட எம்ஜிஆர் மன்னித்து ஏற்றுக் கொண்டார். அது போன்ற பெருந்தன்மை இபிஎஸ் இடம் இல்லையே?
எல்லோருமே தலைவர், அம்மா ஆக முடியாது. இன்று இருக்கும் காலச் சூழ்நிலைக்கேற்றவாறு, இபிஎஸ் முடிவெடுக்கிறார். கட்சிக்கு எது நல்லதோ அதைச் செய்கிறார்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக-வுக்கு ஏற்பட்ட பின்னடைவு இப்போது சரி செய்யப்பட்டு விட்டதா?
மக்களவைத் தேர்தல், சட்டசபைத் தேர்தல் என இரண்டையும் இரண்டு விதமான பார்வையோடு அணுகி தமிழக மக்கள் வாக்களிப்பார்கள். உதாரணமாக, 1980 மக்களவைத் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணியை வெற்றி பெற வைத்த தமிழக மக்கள், அடுத்து வந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக-வுக்கு வாக்களித்து எம்ஜிஆரை முதல்வர் ஆக்கினார்கள். அதே நிலைதான் இப்போதும் நடக்கும்.
இந்த முறை உங்களை எதிர்த்து அமைச்சர் மூர்த்தி போட்டியிடப் போகிறாராமே..?
நிற்கட்டும் சார். நின்றால் தான் தெரியும். கடந்த 15 ஆண்டுகளாக நான் எம்எல்ஏ-வாக உள்ளேன். இதுவரை ஒருமுறை கூட, மக்கள் என்னை மறித்து கேள்வி கேட்டதில்லை. ஆனால், சமீபத்தில் மாடக்குளத்திற்கு அமைச்சர் மூர்த்தி சென்றபோது, மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சராக இருக்கும்போதே இவ்வளவு எதிர்ப்பு என்றால், நாளைக்கு தேர்தல் வந்தால் இவரால் தொகுதிக்குள் அச்சமின்றி செல்ல முடியுமா?
