தமிழக வெற்றிக் கழகத்தின் இணை பொதுச் செயலாளராக உள்ள சி.டி.ஆர். நிர்மல்குமார் கடந்த 2022ம் ஆண்டு எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை ரீ ட்விட் செய்திருந்தார்.
இதனையடுத்து நிர்மல்குமார் மீது வெறுப்புணர்வை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சென்னை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நிர்மல்குமார் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.அறிவழகன், வழக்குப் பதிவு செய்யப்பட்டு மூன்றாண்டுகளுக்கு மேலாகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை எனக்கூறினார்.
மேலும், இந்த பதிவால் சமூகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் கூறினார்.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நிர்மல்குமார் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
