காசோலை மோசடி வழக்கில் பிரபல இயக்குனர் கஸ்தூரிராஜாவை விடுதலை செய்து கிழமை நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பட தயாரிப்புக்காகவும், சொந்த செலவுக்காகவும் இயக்குனர் கஸ்தூரிராஜா, சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் கோத்ரா என்பவரிடம் 65 லட்சம் ரூபாய் கடனாக பெற்றிருந்தார். அதை திருப்பிக் கொடுக்கும் வகையில் வழங்கியிருந்த இரண்டு காசோலைகள், வங்கியில் பணமில்லாமல் திரும்பி வந்தன.
இதையடுத்து, கஸ்தூரிராஜாவுக்கு எதிராக முகுந்த் சந்த் போத்ரா, காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஜார்ஜ் டவுன் நீதிமன்றம், வழக்கில் இருந்து கஸ்தூரி ராஜாவை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து முகுந்த் சந்த் போத்ரா தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் இருந்த போது முகுந்த் சந்த் போத்ரா மரணம் அடைந்தார். இதனால் அவரது மகன் ககன் போத்ரா வழக்கை தொடர்ந்து நடத்தினார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, வழக்கு ஆவணங்களை ஆராய்ந்ததில் புகாரில் முரண்பாடுகள் உள்ளதால், கீழமை நீதிமன்ற தீர்ப்பில் பிழை இல்லை எனக் கூறி, கீழமை நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து, ககன் போத்ராவின் மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
