வங்கதேசத்தில் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் மற்றும் பிற சம்பவங்கள் பற்றிய அறிக்கைகள் அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன.
டாக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆதரவு சங்கத்தின் (HRSS) அறிக்கையின்படி, நவம்பர் மாதம் வரை 276 வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன, இந்த சம்பவங்களில் குறைந்தது 156 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 242 பேர் காயமடைந்தனர். மேலும், இதனால் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 14 பேர் பலியாகின்றனர். நாட்டில் குறைந்தது 1,909 பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு ஆளானதாகவும் இந்த வழக்குகளில் 789 பாலியல் வன்கொடுமைகள் ஆகும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சிகரமான விஷியம் என்றால், பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சிறார்களாவர்.
வங்கதேச செய்தித்தாள் தி டெய்லி ஸ்டார் படி, 15 தேசிய செய்தித்தாள்களின் அறிக்கைகள் மற்றும் அமைப்பின் சொந்த தரவுகளைப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, ஆகஸ்ட் 2024 இல் முகமது யூனுஸின் இடைக்கால அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, மனித உரிமைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு நிலைமை மேம்படவில்லை என்றும், கவலைக்குரியதாகவே உள்ளது என்றும் கூறுகிறது.
வங்கதேசத்தில் கும்பல் கொலைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை, மதத் தலங்களை அழித்தல் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட அரசியல் வன்முறைகள் அதிகரித்துள்ளதை அறிக்கை வெளிப்படுத்துகிறது. காவல்துறையினருடனான மோதல்களிலோ அல்லது காவலில் இருந்தபோது சித்திரவதை செய்யப்பட்டாலோ குறைந்தது 31 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் சிறைகளில் மேலும் 80 கைதிகள் இறந்தனர். 852 அரசியல் வன்முறை சம்பவங்கள் நடந்தன, அவற்றில் 474 சம்பவங்கள் வங்கதேச தேசியவாதக் கட்சி (BNP) மற்றும் அதன் துணை அமைப்புகளுக்குள் ஏற்பட்ட உள் மோதல்களால் ஏற்பட்டவை. இந்த மோதல்களில் 80 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 4,577 பேர் காயமடைந்தனர்.
பங்களாதேஷில், பத்திரிகையாளர்கள் மீதான 293 தாக்குதல் வழக்குகள் பதிவாகியுள்ளன, இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர், 256 பேர் காயமடைந்தனர், 47 பேர் துன்புறுத்தப்பட்டனர், 74 பேர் அச்சுறுத்தப்பட்டனர் மற்றும் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
அறிக்கையின்படி, மார்ச் மாத தொடக்கத்தில், டாக்காவில் செய்தி சேகரிக்கும் போது ஒரு பெண் பத்திரிகையாளர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மேலும், நாட்டின் சைபர் பாதுகாப்பு சட்டம் 2023 இன் கீழ் ஐந்து பேர் உட்பட 105 பத்திரிகையாளர்கள் மீது 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன, அதில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும், சிறுபான்மை சமூகங்கள் மீது குறைந்தது 24 தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. பங்களாதேஷில் பதினைந்து பேர் காயமடைந்தனர், மேலும் ஐந்து கோயில்கள், 37 சிலைகள் மற்றும் 38 வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. 50 க்கும் மேற்பட்ட மதத் தலங்கள் இதேபோல் தாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
