கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மாதவிடாய் விடுமுறைக்கு எதிராக வழக்கு நடைபெற்று வரும் நிலையில், அம்மாநில அரசு பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கும் மாதவிடாய் விடுப்பு வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.
கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் 18 முதல் 52 வயது வரையிலான பெண் பணியாளர்களுக்கு மாதவிடாய் காலத்தில் மாதம் ஒருநாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க மாநில அரசு கடந்த நவம்பர் 20-ம் தேதி உத்தரவிட்டது. இதற்கு எதிராக கர்நாடக ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில், அம்மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில் கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞர் சசிகிரண் ஷெட்டி நேற்று நீதிபதி எம்.ஜோதி முன்னிலையில் ஆஜராகி எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்தார். அப்போது அவர், ‘‘ஜப்பானில் 1947-ம் ஆண்டே மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு விடுமுறை அளிக்கும் முறை அமலுக்கு வந்துள்ளது. கர்நாடகாவில் இந்த திட்டம் தற்போதுதான் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மகளிரின் நலனை கருத்தில் கொண்டு அரசு மேற்கொண்டுள்ள இந்த கொள்கை முடிவில் தனியார் நிறுவனங்களிடம் அனுமதி கேட்க வேண்டியதில்லை” என்றார்.
இந்நிலையில் கர்நாடக அரசு மாதவிடாய் விடுமுறை திட்டத்தை அம்மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கும் நீட்டிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக மாதவிடாய் விடுப்பு கொள்கை சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ள அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி மாதத்துக்கு ஒரு நாள் வீதம் ஆண்டுக்கு 12 நாட்கள் மாணவிகள் மாதவிடாய் விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
