காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் நிகிதா மீது பதியப்பட்ட வழக்கு விசாரணையின் நிலை என்ன என்று கேள்வி எழுப்பிய ஐகோர்ட் மதுரை கிளை, சிபிஐ விசாரணை அதிகாரி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமார் கடந்த ஜூன் 27ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படை காவலர்களால் விசாரணை நடத்தப்பட்ட போது ஜூன் 28ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 5 தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா ,ஆனந்த், பிரபு ,சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவலர்கள் ஆனந்த் உள்ளிட்ட 5 பேர் தங்களுக்கு ஜாமின் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது வழக்கறிஞர் ஹென்றி டிபன் இறந்து போன அஜித்குமார் அவரது தாயார் தரப்பில் இடை ஈட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் காவலர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது ஒரு வழக்கில் மட்டுமே குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது நிகிதா மீது பதியப்பட்ட வழக்கு இதுவரை விசாரணை என்ன நிலையில் உள்ளது என்பது தெரியவில்லை எனவே வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள சூழலில் காவலர்களுக்கு ஜாமீன் வழங்கினால் வழக்கு விசாரணை பாதிக்கும் என கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதேபோல் சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகையதீன் பாட்ஷா காவலர்களுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது நீதிபதி இந்த விவகாரத்தில் நிகிதா வழக்கின் விசாரணையின் நிலை என்ன என கேள்வி எழுப்பினர் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான சிபிஐ டிஎஸ்பி பிப்ரவரி இரண்டாம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்தார்.
