நாடாளுமன்றத்தில் தமிழ் குறித்து அதிர்ந்து பேசிய கமல்ஹாசனுக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், 4-ம் தேதி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பியுமான கமல்ஹாசன் உரையாற்றினார். தனது முதல் உரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறிய அவர், ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் தொடங்கி இறுதியில் தமிழில் முடித்தார்.
கடந்தாண்டு தேசிய கல்விக் கொள்கை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ் படித்தால் பிச்சைக் கூட கிடைக்காது. தமிழ் படித்தது பிச்சை எடுப்பதை தவிர உயிர்வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை என பெரியார் பேசியதை குறிப்பிட்டிந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய கமல்ஹாசன்,
தமிழ் பிச்சை எடுக்க உதவாது.. திருடவும் உதவாது..தமிழன் பிச்சை எடுக்கமாட்டான்
PARLIAMENT-ல் கலக்கிய – கமல்ஹாசன் எம்.பி #கமல்ஹாசன் #ParlimentSession #parliament #ParliamentSession #KamalHaasan #NirmalaSitharaman pic.twitter.com/O9KOJTPtLF— TNTalks (@tntalksofficial) February 4, 2026
”எமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே… தமிழ் பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது. தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான்” என வீரமாக கூறியிருந்தார். கமல்ஹாசனின் இந்த உரைக்கு பலரும் பாராட்டு தெரிவித்த நிலையில், கவிஞர் வைரமுத்துவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ”கமல்ஹாசன் எம்.பி அவர்களின் நாடாளுமன்ற உரைக்கு எனது பாராட்டும் அவர் பேசி அனுப்பிய விடையும் அன்புள்ள கமல் எம்.பி அவர்களே! கன்னிப் பேச்சல்ல; காளைப் பேச்சு, ஒரு தேசியவாதியின் மொழி ஆனால் தமிழ் சாதியின் குரல். நாடாளுமன்றமே நிமிர்ந்து அமர்ந்தது தாடிச் சிங்கத்தின் தமிழ் கேட்டும்; ஆங்கிலம் கேட்டும். என்னையறியாமல் மீசை முறுக்கின என் கட்டை விரலும் சுட்டுவிரலும். காடு அதிரட்டும் களிறே பிளிறு” எனக் குறிப்பிட்டுள்ளார்.
