தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30-ம் தேதி தொடங்கியது. அரசு விடுமுறை நாட்கள் போக, மிகக் குறைந்த நாட்களே அவகாசம் இருந்த நிலையில், வேட்பாளர்கள் ஆர்வத்துடன் மனுத்தாக்கல் செய்து வருகின்றனர். இதுவரை சுமார் 3000-க்கும் மேற்பட்டோர் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், நேற்று (ஏப்ரல் 4) ஒரே நாளில் மட்டும் 2000-க்கும் அதிகமானோர் மனுக்களைச் சமர்ப்பித்துள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்ய நாளை (ஏப்ரல் 6) கடைசி நாள் என்பதால், மீதமுள்ள வேட்பாளர்கள் நாளை தங்கள் மனுக்களைத் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை 3000 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாளை காலை 11 – 3 மணி வரை மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்யப்படும். சரியாக 3 மணிக்கு அலுவலக நுழைவாயில் மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் அ.தி.மு.க – பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ஜ.க 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மத்திய இணை அமைச்சர் எல். முருகன் அவினாசி தொகுதியிலும், அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகி சி.வி. சண்முகம் மயிலம் தொகுதியிலும் களம் காண்கின்றனர். இதற்கிடையே, காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட வி.சி.க தலைவர் திருமாவளவன், கடைசி நேரத்தில் தனது முடிவை மாற்றிக்கொண்டு அங்கு ஜோதிமணி என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது அரசியல் பயணத்தின் முதல் தேர்தலிலேயே சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியில் மார்ச் 30-ம் தேதியும், திருச்சி கிழக்கில் ஏப்ரல் 2-ம் தேதியும் அவர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். விஜய்யின் பிரமாணப் பத்திரத்தில் சில தகவல்கள் விடுபட்டிருப்பதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, அவர் தற்போது திருத்தப்பட்ட புதிய பிரமாணப் பத்திரத்தைத் தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பித்துள்ளார். 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் தவெக-வின் இந்த அதிரடி நகர்வுகள் தேர்தல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
