ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தற்போது ஒரு இக்கட்டான நிலையில் இருந்தாலும், பேட்டிங்கில் புதிய மைல்கல்லை எட்டி ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. பொதுவாக அதிக ரன்களைக் குவிப்பதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அல்லது ஆர்சிபி போன்ற அணிகளே முன்னிலையில் இருக்கும் என்று கருதப்படும் நிலையில், புள்ளிவிவரங்களின்படி சிஎஸ்கே தான் தற்போது “கிங்” ஆக உருவெடுத்துள்ளது. நேற்று (ஏப்ரல் 5) நடைபெற்ற ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே தோல்வியடைந்தாலும், அந்தப் போட்டியில் எடுத்த 207 ரன்களின் மூலம் ஒரு பிரம்மாண்ட சாதனையைப் படைத்துள்ளது.
நேற்றைய போட்டியில் சிஎஸ்கே 207 ரன்களை எட்டியதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை 200+ ரன்களைக் கடந்த முதல் அணி என்ற பெருமையை சிஎஸ்கே பெற்றுள்ளது. இதுவரை மொத்தம் 37 முறை சிஎஸ்கே 200 ரன்களுக்கு மேல் விளாசி முதலிடத்தில் உள்ளது. முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலேயே 36-வது முறையை எட்டி ஆர்சிபியின் சாதனையை சிஎஸ்கே சமன் செய்திருந்தது. தற்போது ஆர்சிபிக்கு எதிரான போட்டியிலேயே அவர்களை முந்தி தனிப்பெரும் சாதனையைப் படைத்துள்ளது சிஎஸ்கே.
இந்த வரலாற்றுப் பட்டியலில் சென்னை அணிக்கு அடுத்தபடியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி 36 முறைகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இவர்களைத் தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் அணி 33 முறைகளுடனும், மும்பை இந்தியன்ஸ் அணி 32 முறைகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்த சீசனில் சிஎஸ்கே தொடர் தோல்விகளைச் சந்தித்தாலும், பேட்டிங்கில் அவர்களின் அதிரடி குறையவில்லை என்பதையே இந்த 200+ ரன் சாதனைகள் காட்டுகின்றன.
