அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்கவும், நிரந்தர அமைதியை நிலைநாட்டவும் 45 நாட்கள் தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இரு நாடுகளும் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. . இது தொடர்பான பேச்சுவார்த்தையில் பிராந்திய சமரசக் குழுவினரும் இணைந்துள்ளதாக ‘ஆக்சியோஸ்’ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த அமைதிப் பேச்சுவார்த்தையை இரண்டு முக்கியக் கட்டங்களாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, உடனடியாக 45 நாட்களுக்குப் போரை நிறுத்திவிட்டு, அந்த இடைவெளியில் நிரந்தரத் தீர்வு காண்பதற்கான இறுதி உடன்படிக்கை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
இந்தத் தற்காலிகப் போர்நிறுத்தக் காலத்தில் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை என்றால், பேச்சுவார்த்தைக்காகக் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தத் தகவல்கள் குறித்து அமெரிக்கத் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமான விளக்கங்கள் எதுவும் அளிக்கப்படவில்லை. ராய்ட்டர்ஸ் போன்ற சர்வதேச செய்தி நிறுவனங்களும் இந்தத் தகவலை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை எனத் தெரிவித்துள்ளன. இராஜதந்திர ரீதியிலான இந்த முயற்சிகள் ஒருபுறம் நடந்தாலும், மறுபுறம் களத்தில் பதற்றமான சூழலே நீடித்து வருகிறது.
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்குக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கு வரும் செவ்வாய்க்கிழமை மாலை வரை ஈரானுக்குக் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்தக் கெடுவுக்குள் ஈரான் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், அந்த நாட்டின் முக்கிய உள்கட்டமைப்பு வசதிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். ‘வால் ஸ்திரீட் ஜர்னல்’ பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.
