மறுவரையறைச் சட்டம் தமிழ்நாட்டின் துரோகிகள் யார் என்பதை அவர்களின் வாயாலேயே சொல்ல வைத்திருக்கிறது. அப்படி துரோகம் செய்த பழனிசாமியின் அடிமைக் கும்பலுக்கு, தேர்தலுக்கு முன்பே படுதோல்வி கிடைத்திருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகம், மேற்கு வங்கம் என 2 பெரிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை தீவிரமடைந்துள்ள நிலையில் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய மோடி அரசு மகளிர் இடஒதுக்கீட்டு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தொகுதிகளை மறுவரையறை செய்ய 131-வது அரசியல் சாசன திருத்த மசோதாவை மக்களவையில் அறிமுகம் செய்தது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து நேற்று வாக்கெடுப்பில் 326 எம்பிகளின் ஆதரவு தேவை என்ற நிலையில் 278 எம்.பிக்களே மசோதாவை ஆதரித்தனர். இதனால் மோடி அரசு தாக்கல் செய்த மசோதா தோல்வி அடைந்தது.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 18) தனது எக்ஸ் பதிவில் , “Delimitation : நண்பர்கள் யார், துரோகிகள் யார் யார் என்பதை அடையாளம் காட்டியுள்ளது. புது வரலாறு படைத்துள்ள தி.மு.க.வை இந்தியாவே உயர்வாகப் பேசுகிறது! நமது வெற்றி தொடரட்டும்!” என தெரிவித்துள்ளார்.
https://x.com/mkstalin/status/2045403736567349697?s=46
இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில், “மகிழ்ச்சியோடும், ஒரு புதிய எர்ஜியோடும் உங்கள் முன்னால் நிற்கிறேன். டெலிமிடேஷன் என்னும் கருப்புச் சட்டத்துக்கு எதிரான நம்முடைய போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த ஆபத்தை ஒரு வருடத்துக்கு முன்பே அறிந்து, இந்த வெற்றியைப் பெறுவதற்கான எல்லாப் பணிகளையும் அப்போதே நாம் தொடங்கினோம். மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர்களின் ஒருங்கிணைப்புக் கூட்டம் தொடங்கி, நேற்று முன்தினம் கருப்புக் கொடி ஏற்றி, கருப்புச் சட்டத்தின் நகலை எரித்தேன். அதுவே நேற்று திண்டுக்கல்லில் வெற்றிக்கான வெடியைத் கொளுத்தினேன். “தீ பரவட்டும்” என்று சொன்னேன். அந்தத் தீ நாடாளுமன்றம் வரை பரவியது. ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் பார்த்த பழைய திமுகவை இனி பார்க்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்தேன்.
வடக்கு-தெற்கு என்று நமக்குள் பிளவை ஏற்படுத்தி சண்டை மூட்டி வைக்கலாம் என்று நினைத்தவர்களுக்கு சரியான சம்மட்டி அடி கிடைத்திருக்கிறது.பன்னிரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக பிரதமர் மோடி அரசு கொண்டு வந்த அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா தோல்வியடைந்திருக்கிறது. இது தொடக்கம்தான். பாஜக இனி நாடு முழுக்கப் பெறப் போகும் தோல்விகளுக்கான தொடக்கம் இது. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கான தொடக்கமும் இது.“நாம் ஒன்று சேர்ந்தால் வெற்றி உறுதி” என்று நான் தொடர்ந்து சொல்லி வந்தேன். அது உண்மை என்பதை காட்டியிருக்கும் தொடக்கம் இது.
இந்த நேரத்தில், நேற்று நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும், “பெண்கள் இட ஒதுக்கீட்டுக்கும் இந்த மசோதாவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இது ஒரு தேசவிரோதச் சட்டம். இதை அனுமதிக்க மாட்டோம். எல்லோரும் சேர்ந்து தோற்கடிப்போம்” என்ற தெளிவான உணர்வுகளை வெளிப்படுத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அன்பு சகோதரர் ராகுல் காந்தி அவர்களுக்கும், காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் அம்மையார் சோனியா காந்தி அவர்களுக்கும், காங்கிரஸ் பேரியக்கத் துணைத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காங்கிரஸ் மட்டுமல்ல, திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் அருமை சகோதரி மமதா பானர்ஜி, உத்தரப் பிரதேசத்தின் ஒளிவிலக்கு சகோதரர் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ராஷ்ட்ரீய ஜனதா தள செயல் தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே, பிஜூ ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சகோதரர் டி. ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி, பிஆர்எஸ் கட்சித் தலைவர் கே. சந்திரசேகர் ராவ், சிரோமணி அகாலி தள தலைவர் சுக்பீர் சிங் பாதல் ஆகிய தேசியத் தலைவர்களுக்கும் என் நன்றிகள்.
அதுவும் தொடக்கத்திலிருந்து இந்த முயற்சியில் என் கரங்களை வலுப்படுத்திய நம்முடைய திராவிட உடன்பிறப்புக்களான தோழர் பினராயி விஜயன், சகோதரர் ரேவந்த் ரெட்டி, மரியாதைக்குரிய சித்தராமையா, நண்பர் டி.கே. சிவகுமார் ஆகியோருக்கும், தமிழ்நாட்டில் இருக்கும் நம்முடைய கொள்கைத் தோழமைகளான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.
இப்போது நாம் பெற்றிருப்பது பாதி வெற்றிதான். 2001-ஆம் ஆண்டில் செய்தது போலவே, இப்போதும் அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு — அதாவது 2051 வரை — தொகுதி எண்ணிக்கையை மறுவரையறை செய்வதைத் தள்ளி வைக்க அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும். அது மட்டுமல்ல, பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுக்காக 2023-ஆம் ஆண்டே நாம் ஆதரித்து நிறைவேற்றிய சட்டத்தை, எந்த நிபந்தனையும் இல்லாமல், பாஜக அரசு உடனடியாக இப்போதுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கே அமல்படுத்த வேண்டும். அதுதான் முழு வெற்றியாக அமையும். அதற்காகத் தொடர்ந்து போராடுவோம்.
மகிழ்ச்சியான இந்த நேரத்தில், இந்தத் தொகுதி மறுவரையறைச் சட்டம் யாரெல்லாம் நம் நண்பர்கள் என்பதை மட்டும் அடையாளம் காட்டவில்லை. தமிழ்நாட்டின் துரோகிகள் யார் என்பதையும் அவர்களின் வாயாலேயே சொல்ல வைத்திருக்கிறது. அப்படி துரோகம் செய்த பழனிசாமியின் அடிமைக் கும்பலுக்கு, தேர்தலுக்கு முன்பே படுதோல்வி கிடைத்திருக்கிறது.
பழனிசாமி டெல்லியின் ஏஜெண்ட் என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது.நம்முடைய திராவிட இயக்க வரலாறு என்ன? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் சட்டத் திருத்தத்துக்காகப் போராடி இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தது திமுக. எப்போதெல்லாம் இந்துத்துவத் திணிப்பு வருகிறதோ, அப்போதெல்லாம் உறுதியாகப் போராடி வென்றது திமுக. அதேபோலத்தான் நேற்றும், தமிழ்நாட்டின் உரிமைகளையும் பிரதிநிதித்துவத்தையும் தடுக்க நினைத்தவர்களை எதிர்த்து போராடி வென்றிருக்கிறது திமுக. இந்தியாவே இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றி உயர்வாகப் பேசுகிறது. நம்முடைய வெற்றிகள் தொடரட்டும்… தொடரும்!
தமிழ்நாட்டு மக்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப் பார்த்த பாஜகவுக்கும், அவர்களுடைய ஏவல் அடிமைகளான அதிமுகவுக்கும், 2026 சட்டமன்றத் தேர்தலில் மறக்க முடியாத மாபெரும் தோல்வியைக் கொடுப்போம். வெல்வோம்… ஒன்றாக!” என தெரிவித்துள்ளார்.
