தமிழகத்தில் மாவட்ட மற்றும் சிறப்பு நீதிமன்றங்களில் பணியாற்றி வரும் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்கள் உள்ளிட்ட 95க்கும் மேற்பட்டோர் ஒரே கட்டமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் எஸ்.அல்லி வெளியிட்டுள்ளார்.
இந்த மாற்றங்களில், முக்கிய அரசியல் மற்றும் பிரபல வழக்குகளை விசாரித்து வந்த நீதிபதிகளும் இடம் பெற்றுள்ளனர். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்குகளை விசாரித்து வந்த சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் சி. சஞ்சய்பாபா மற்றும் என். வேங்கடவரதன் ஆகியோரும் மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், தவெக தலைவர் விஜய் தொடர்புடைய விவாகரத்து வழக்கை விசாரித்து வந்த செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்ற நீதிபதி சசிகலாவும் பணியிட மாற்றப்பட்டுள்ளார்.
இந்த இடமாற்றங்கள் வழக்கமான நிர்வாக மாற்றங்களின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டதாக நீதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாநிலம் முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகள் மற்றும் மாஜிஸ்திரேட்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால், நீதித்துறை நிர்வாகத்தில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
