தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தலைநகர் சென்னை ஒட்டுமொத்தமாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் வசமாகி வருவது அரசியல் உலகைத் திகைக்க வைத்துள்ளது. சென்னையில் உள்ள மொத்தம் 16 தொகுதிகளில், துறைமுகம் தொகுதியைத் தவிர மற்ற 15 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் அபார முன்னிலை பெற்றுள்ளனர். திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்பட்ட சென்னையில், அக்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தவெக-வின் வேகத்திற்கு முன்னால் தடுமாறி வருகின்றனர். எழும்பூர், ராயபுரம், பெரம்பூர் என வடசென்னை முதல் தென்சென்னை வரை தவெக வேட்பாளர்கள் முன்னிலை பெற்று வருவது, சென்னை அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குவதைக் காட்டுகிறது.
மிக முக்கியமாக, கொளத்தூர் தொகுதியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர் பின்னடைவு ஏற்பட்டு வருவது திமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல் சுற்றைத் தொடர்ந்து, இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் முதலமைச்சர் ஸ்டாலின் பின்னடைவைச் சந்தித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி, தவெக வேட்பாளர் அவரை விடக் கூடுதல் வாக்குகள் பெற்றுத் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். முதலமைச்சரின் சொந்தத் தொகுதியிலேயே இரண்டாவது சுற்றிலும் தவெக முன்னிலை பெற்றுள்ளது, அந்தத் தொகுதியின் தேர்தல் முடிவை நோக்கிய எதிர்பார்ப்பைப் பலமடங்கு அதிகரித்துள்ளது.
இதேபோல் 2வது சுற்றிலும் சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலினும் தொடர் பின்னடவை சந்தித்து வருகிறார்.
