நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே பழிக்குப் பழியாக நடந்ததாகக் கூறப்படும் கொடூர தாக்குதலில் தந்தை மற்றும் அவரது 5 வயது மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூலச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து (40). இவர் தனது மகன்களான சின்னதுரை (15) மற்றும் ஜெயராஜ் (5) ஆகியோருடன் இன்று பிற்பகலில், இருசக்கர வாகனத்தில் வீரவநல்லூர் அருகே உள்ள வல்லத்தி நம்பிகுளம் பகுதியில் இருந்து சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவர்களைப் பின்தொடர்ந்து வந்த காரில் இருந்த மர்ம கும்பல், இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் அனைவரும் கீழே விழுந்த நிலையில், 5 வயது ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தப்பி ஓட முயன்ற காளிமுத்துவை மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்ததுடன், அவரது தலையை துண்டித்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கரம்பை மாநில நெடுஞ்சாலையில் வீசிவிட்டு தப்பியோடியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தாக்குதலில் காயமடைந்த 15 வயது சின்னதுரை எலும்பு முறிவுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பாலசுப்பிரமணிய சாஸ்திரி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். உயிரிழந்த இருவரின் உடல்களும் உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
முதற்கட்ட விசாரணையில், ஏற்கனவே நடந்த ஒரு கொலைச் சம்பவத்திற்குப் பழிக்குப் பழியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் உயிரிழந்த காளிமுத்துவின் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும், இதுகுறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த இரட்டைக் கொலை சம்பவத்தைத் தொடர்ந்து மூலச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தப்பியோடிய குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
