தமிழக அரசியலில் ஒவ்வொரு முதல்வரையும் சுற்றி அதிகாரம் செலுத்தும் ஒரு ஆலோசகர்கள் வட்டம் (Inner Circle) இருப்பது புதிய விஷயமல்ல. முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி, எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் என அனைவரின் ஆட்சிக் காலங்களிலும், அதிகாரப்பூர்வ பதவியில் இல்லாத நெருக்கமான ஆலோசகர்கள் அரசின் செயல்பாடுகளில் செல்வாக்கு செலுத்தியதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.
ஆனால், தற்போதைய முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு மீது எழுந்துள்ள அதிகார மைய சர்ச்சை புதிய வகையில் வெடித்துக் கிளம்பியுள்ளது. முதல்வரின் நெருங்கிய ஆலோசகர்களாகக் கருதப்படும் சிலர் அமைச்சரவை கூட்டங்கள், உயர்மட்ட ஆய்வுக் கூட்டங்கள் உள்ளிட்ட ரகசிய அரசு ஆலோசனைகளில் பங்கேற்றதாக சொல்லப்படுவதுதான் பிரச்சனையை தீவிரமாக்கி உள்ளது.
ஜான் ஆரோக்கியசாமி
இந்த விவகாரத்தை முதலில் பொதுவெளியில் எழுப்பியது திமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன். அரசு ஊழியர்கள் அல்லாத ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரவை மற்றும் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்கின்றனர்? ரகசிய ஆவணங்கள் பரிமாறப்படும் கூட்டங்களில் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதற்கான சட்ட அடிப்படை என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அதைத் தொடர்ந்து, ஜூன் 30-ஆம் தேதி திமுக-வின் அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி, கடந்த ஜூன் 30 அன்று தமிழக டிஜிபி-யிடம் ஒரு அதிரடிப் புகாரை அளித்தார். அதில், முதலமைச்சர் விஜய்யின் நெருங்கிய நண்பரான விஷ்ணு ரெட்டி மற்றும் அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் அதிகாரப்பூர்வமற்ற முறையில் அமைச்சரவைக் கூட்டங்கள் மற்றும் அரசின் ரகசிய ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டம் முதலமைச்சர் தன் பதவியேற்பின் போது எடுத்த ‘ரகசியக் காப்புப் பிரமாணத்தை’ ((Official Secrets Act) இந்த நபர்களின் தலையீடு மூலம் மீறியுள்ளார் என்றும், இதன் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இந்தச் சர்ச்சையின் மையத்தில் இருப்பவர் ஜான் அரோக்கியசாமி. தேர்தலுக்கு முன்பே விஜயின் அரசியல் வியூக நிபுணராக செயல்பட்ட அவர், தேர்தல் பிரசாரம் முதல் ஆட்சி அமைந்த பிறகும் கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். அண்மையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில், “ஆறு மாதங்களில் ஊழல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என அரசின் நிலைப்பாட்டை விளக்கியும் பேசியிருந்தார்.
மற்றொருபுறம், விஷ்ணு ரெட்டி. விஜயின் நீண்டகால நெருங்கிய நண்பராகவும், தேர்தல் பிரசாரம், முதல்வரின் தினசரி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் அரசியல் திட்டமிடல்களில் முக்கிய பங்காற்றுபவராகவும் கூறப்படுகிறார். ஆனால், அவரது அதிகாரப்பூர்வ பொறுப்பு குறித்து அரசுத் தரப்பில் விரிவான விளக்கம் வெளியாகவில்லை.
திரை உலக மேலாளர்கள் முதல் தயாரிப்பாளர்கள் வரை
விஜய்யின் இந்த உள்வட்டாரப் பட்டியல் இத்துடன் முடிவடையவில்லை. விஜய்யின் நீண்ட காலத் திரைத்துறை மேலாளரான ஜெகதீஷ் பழனிசாமி, கடந்த ஜூன் 22 அன்று முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளுக்கு இன்ஸ்டாகிராமில் வாழ்த்துப் பகிர்ந்த போது, தான் “முதலமைச்சரின் தனிச் செயலாளர்” (Private Secretary to CM) என்ற புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
பெங்களூருவைச் சேர்ந்த கேவிஎன் (KVN) குழுமத்தின் தலைவரும், விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத் தயாரிப்பாளருமான கே. வெங்கட நாராயணா, புதுடெல்லிக்கான தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதியாக கேபினட் அந்தஸ்துடன் நியமிக்கப்பட்டுள்ளார். மாநிலத்தின் மிக முக்கிய அரசியல் மற்றும் நிர்வாகப் பாலமாக இருக்க வேண்டிய இந்த பதவிக்கு ஒரு தொழிலதிபரை நியமித்தது முரண்பாடான விஷயம் என எதிர்க்கட்சிகள் சாடுகின்றன.

தமிழகத்தின் பிரபல வார இதழின் முன்னாள் ஆசிரியர் உட்பட சில மூத்த பத்திரிகையாளர்களும், எந்தவொரு அதிகாரப்பூர்வப் பதவியும் இல்லாமல், அரசு அதிகாரிகளின் இடமாற்றம் மற்றும் நிர்வாக முடிவுகளில் முதலமைச்சருக்குத் திரைக்குப் பின்னால் இருந்து ஆலோசனைகளை வழங்கி வருவதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திரைப்படத் துறையிலிருந்து வந்த நெருக்கமான நபர்கள் அரசின் முக்கிய பொறுப்புகளில் இடம்பெறுவது குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன.
கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள்
எனினும், முதல்வர் விஜய் தனது திரைப்பட வாழ்க்கையிலிருந்தே நம்பிக்கைக்குரிய நபர்களுடன் பணியாற்றி வந்தவர் என்பதால், அவர்களையே ஆட்சியிலும் பயன்படுத்துவது தவறல்ல என்று தவெக தரப்பினர் வாதிடுகின்றனர். தேர்தல் வியூகங்கள், நிர்வாக ஒருங்கிணைப்பு, தகவல் தொடர்பு ஆகிய துறைகளில் அனுபவமுள்ள நபர்களின் பங்களிப்பு அரசுக்கு பலனளிக்கக்கூடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால், அரசியல் மற்றும் நிர்வாகத்தில் முக்கியமான கேள்வி வேறு. அவர்கள் யார் என்பது பிரச்சினையல்ல; அவர்கள் எந்த அதிகாரத்தில் செயல்படுகிறார்கள் என்பதுதான்.
அமைச்சரவை கூட்டங்களில் பங்கேற்கும் அதிகாரம் அவர்களுக்கு அரசாணை மூலம் வழங்கப்பட்டுள்ளதா? அவர்கள் அரசு ஆலோசகர்களா, ஒப்பந்த ஊழியர்களா, அல்லது சிறப்பு அதிகாரிகளா? அவர்களின் பொறுப்பு, அதிகார வரம்பு, ஊதியம் உள்ளிட்ட விவரங்கள் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளனவா என்ற கேள்விகளே தற்போது அரசியல் விவாதத்தின் மையமாக உள்ளன.
அரசு தரப்பில், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உரிய அதிகாரப்பூர்வ நியமனங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், அந்த நியமன ஆணைகள், அதிகார வரம்புகள் மற்றும் அவர்கள் அரசின் முடிவெடுக்கும் செயல்முறையில் வகிக்கும் பங்கு குறித்து முழுமையான விளக்கம் வெளியிடப்பட வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் கோரிக்கையாக உள்ளது.
எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு எத்தகைய விளக்கத்தை அளிக்கப்போகிறது அல்லது நடவடிக்கையை மேற்கொள்ளப்போகிறது என்பதைப் பொறுத்தே இந்தச் சர்ச்சை முடிவுக்கு வருமா அல்லது மேலும் பூதாகரமாகுமா என்பது தெரியவரும்.
-பா. முகிலன்
