தவெக எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் பேசியதாக கைது செய்யப்பட்ட மேலும் 5 பேரை ஜூலை 16 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர இருப்பதாகவும், ஆளும் தவெக கட்சியின் உறுப்பினராக இருந்தாலும் அத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் போது தாங்கள் சொல்லும் படி நடந்து கொள்ள வேண்டும். அதற்கு சன்மானமாக ரூ.35 கோடி வரை தருவதாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ என். இளையராஜாவிடம் சிலர் தொலைப்பேசி மூலம் பேரம் பேசியுள்ளனர்.
இதுதொடர்பாக தவெக எம்எல்ஏ என். இளையராஜா, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.அமல்ராஜை சில நாள்களுக்கு முன்பு சந்தித்து புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில், வழக்குபப்திவு செய்த திருவல்லிக்கேணி போலீசார், சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த யூ-டியூபர் திருநாவுக்கரசு, திருச்சியைச் சேர்ந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் ஆகியோரை கைது செய்து நீதிமன்ற உத்தரவின் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைவர்களாக ரமேஷ், சீனிவாசன், செல்வன், ராஜேஷ், கார்த்திக் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் இவர்கள் 5 பேரையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன் இன்று நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, இது தொடர்பாக ஏற்கனவே 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் வழக்கில் விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது, கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டால் புலன் விசாரணை பாதிக்கும் என்பதால், 5 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க வேண்டும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி எஸ்.கார்த்திகேயன், 5 பேரையும் ஜூலை 16 வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவிட்டார்.
