தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றிக் கழகம்105 தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றி முகத்தில் இருப்பதால், அக்கட்சியின் தொண்டர்கள் மட்டுமின்றி அக்கட்சித் தலைவர் விஜய்யின் குடும்பத்தினரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இன்று காலையில் திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சென்னை திரும்பிய விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு, அவரது இல்லத்தில் உறவினர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தனது மகனின் கட்சி முதல் தேர்தலிலேயே இவ்வளவு பெரிய வெற்றியை நோக்கிச் செல்வதைக் கண்டு அவர் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.
வீட்டின் லிப்டில் இருந்து எஸ்.ஏ.சி வெளியே வந்தவுடன், அங்கு காத்திருந்த உறவினர்கள் ஆரவாரம் செய்து, துள்ளி குதித்து அவரை வரவேற்றனர். இந்த நெகிழ்ச்சியான தருணங்கள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. “தளபதி” விஜய்யின் அரசியல் வருகைக்கும் வெற்றிக்கும் ஆரம்பத்திலிருந்தே ஆதரவாக இருந்த அவரது தந்தை, இன்று கிடைத்துள்ள இந்த பிரம்மாண்ட முன்னிலையைக் கொண்டாடும் விதம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் தவெக, தமிழக அரசியலில் ஒரு புதிய வரலாற்றைப் படைக்கப் போவதை இந்தத் தருணங்கள் உறுதிப்படுத்துகின்றன.
