தவெகவுக்கு ஆதரவு அளித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஹைதராபாத்துக்கு சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றிய தவெக ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்காக பல்வேறு கட்சிகளிடம் ஆதரவு கோரியது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் தனது 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவை தவெகவுக்கு வழங்கியுள்ளது. தொடர்ந்து சிபிஐ, சிபிஎம் கட்சிகளும் ஆதரவை அளித்துள்ளது.
இந்த நிலையில் தவெகவுக்கு ஆதரவு வழங்கிய காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களை உடனடியாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்துக்கு செல்லும்படி காங்கிரஸ் அகில இந்திய தலைமை உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன்படி, நேற்று இரவு 7 மணிக்கு சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ.க்கள் விஸ்வநாதன், ஜமால் முகமது யூனுஸ், தாரகை கத்பர்ட் ஆகிய 4 பேரும் திடீரென புறப்பட்டு சென்றனர்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரவீன், ஏற்கனவே பெங்களூரு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் தெலுங்கானா மாநிலத்தில் பாதுகாப்பாக தங்கி இருந்து விட்டு, தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நாளில் சென்னைக்கு திரும்புவார்கள் எனக் கூறப்படுகிறது.
