நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் இன்று சொன்னது போல் வெளியாகாமல் போனதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகரான சூர்யா ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கருப்பு படத்தில் நடித்து முடித்துள்ளார். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தில் திரிஷா நாயகியாக நடித்துள்ளார்.
சுவாசிகா, இந்திரன்ஸ், யோகிபாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி, மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் நடித்துள்ள இப்படம் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், படம் வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இப்படத்திற்கான சிறப்பு காட்சிகளை இன்று காலை திரையிட தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியது. இன்று காலை 9 மணிக்கு திரையிடப்பட இருந்த காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ தவிர்க்க முடியாத காரணங்களால் ‘கருப்பு’ திரைப்படத்தின் காலை 9 மணி சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. இதனால் ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு அனைவரிடமும் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர்களுக்கு இடையேயான நிதிப் பிரச்னையால் வெளியீடு தள்ளிப் போவதாக கூறப்படுகிறது. இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி, “அனைத்து ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்கிறேன். இது நடந்திருக்கக் கூடாது. திரைப்படம் பார்ப்பதே நம் துன்பங்களை மறக்கத்தான். ஆனால், படம் பார்க்க வருவதே துன்பமாக அமைந்துவிடக்கூடாது.
நானும் இதை எதிர்பார்க்கவில்லை. கருப்பன் வரான் வழி மறிக்காதே என்றால் நிறைய பேர் மறித்துக் கொண்டிருக்கிறார்கள். கடவுள் நம்முடன் இருக்கிறார். படம் இன்று மாலை வெளியாகும் என நம்புகிறேன். உங்களுக்கெல்லாம் கண்டிப்பாக பிடிக்கும்.” என கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.
