திருப்பூர் ராயபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் சமூக நீதி விடுதியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, விடுதியின் முதலுதவிப் பெட்டியில் காலாவதியான மாத்திரைகள் இருப்பதைக் கண்டறிந்த அமைச்சர், இது குறித்து விடுதிக் காப்பாளர்களைக் கடுமையாக எச்சரித்தார். மேலும், கழிப்பிடங்களில் கதவுகள் இல்லாத அவல நிலையை நேரில் பார்த்த அவர், அவற்றை உடனடியாகச் சரிசெய்ய அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டார்.
தொடர்ந்து விடுதியின் உணவகத்தில் ஆய்வு செய்த அமைச்சர், அங்கிருந்த மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்தி, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது, கூடுதல் கழிப்பறைகள் தேவைப்படுவது குறித்தும், அறைகளில் மின்விசிறிகள் வசதி இல்லாதது குறித்தும் மாணவிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். மாணவிகளின் தேவைகளை நிறைவேற்றப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சம்பத், “முதலமைச்சர் விஜய்யின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் உள்ள சமூக நீதி விடுதிகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே திருப்பூர் விடுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு பல குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. முதல்முறை என்பதால் காப்பாளர்களை எச்சரித்துள்ளேன்; இனி வரும் காலங்களில் இது போன்ற அலட்சியம் தொடர்ந்தால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, அமைச்சரின் வருகையை முன்னிட்டு அந்த விடுதியில் கடைசி நேரத் தூய்மைப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. அரசு விடுதிகளின் தரத்தை உயர்த்தும் நோக்கில் அமைச்சரின் இந்த அதிரடி ஆய்வு, அப்பகுதி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
